அரசு பள்ளியில் மாணவியை தொடர்ந்து மாணவன் மர்ம மரணம்.. விரிவான விசாரணை கோரும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் துவாக்குடியில்  செயல்பட்டு வரும்  திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்  12-ஆம் வகுப்பு  பயின்று வந்த  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த  யுவராஜ் என்ற மாணவர்,  அவரது  விடுதி அறையில்  மர்மமான முறையில்  உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து  பெரும் அதிர்ச்சி அடைந்தேன். யுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர் யுவராஜ் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆயிரமாயிரம் மர்மங்கள்  எழுந்துள்ள நிலையில்,  அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. மாணவர் யுவராஜ்  அவரது விடுதி அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு , கேபிள் ஒயரைக் கொண்டு மின்விசிறியில்  தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்றும், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 12-ஆம்  வகுப்பு மாணவி கிருத்திகா கடந்த  ஜூன் 11-ஆம் நாள்  துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. அதைத்  தொடர்ந்து அனைத்து  அறைகளிலும்  உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது  மாணவர் யுவராஜ் எவ்வாறு விடுதி அறையின் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு  தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்? என்று சக மானவர்களும்,  யுவராஜின்  பெற்றோரும்  எழுப்பும் வினாக்களுக்கும்  பள்ளி நிர்வாகத்திடமிருந்து  எந்த பதிலும் இல்லை.

அதுமட்டுமின்றி,  மாணவர் யுவராஜ் மர்மமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் தினத்திற்கு முந்தைய நாள்  இரவு,  அவர் தமது  தாய், தந்தையருடன் தொலைபேசியில் மகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது  குடும்பத்தினர் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் மாணவர் யுவராஜ்  தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதை  ஏற்க முடியவில்லை.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  அரசு பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தான்  பல்வேறு தேர்வுகள் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்டு  மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.  அதிலும்  குறிப்பாக  இந்த மாதிரிப் பள்ளி,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின்  சொந்தத் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை  கடந்த மே மாதம் 8-ஆம்  தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் திறந்து வைத்தார்கள்.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியில்  அனைத்து சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு,  மாணவர்கள் மன மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சூழல் அங்கு இல்லை.

திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்  இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை.  இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக மாணவர் யுவராஜ்  மர்மமான முறையில்  உயிரிழந்தது குறித்து  விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.  அத்துடன் மாணவர் யுவராஜின்  குடும்பத்திற்கு  ரூ.50 லட்சம் இழப்பீடு  வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin School students mystery death


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->