சாதிவாரி கணக்கெடுப்பு: திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin caste survey
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை.
கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது.
இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணியில் மொத்தம் 1.60 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் 2 கோடி குடும்பங்களிடம் நடத்தப்படவுள்ள இந்தக் கணக்கெடுப்பில் 60 வினாக்கள் கேட்கப்படவுள்ளன. கர்நாடக மக்களுக்கு அனைத்து வகையான சமூகநீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால், இங்கு தமிழ்நாட்டில்....?
பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்... தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.
கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைந்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin caste survey