அமித்ஷா வருகைக்கு முன்னே அதிமுகவுடன் டீலை முடிக்க பியூஷ் கோயல் திட்டம்..பிடி கொடுப்பாரா இபிஎஸ்! நடப்பது என்ன? - Seithipunal
Seithipunal


ஜனவரி 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அதிமுக–பாஜக கூட்டணியில் உள்ள தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை இப்போதே முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்ட அதிமுக–பாஜக கூட்டணி இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது. ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம் போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே தற்போது NDA கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இதில் குறிப்பாக தேமுதிக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாக எந்த முடிவும் எடுக்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதே நேரத்தில், ஜனவரி 4ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயண நிறைவு விழாவில் கலந்துகொள்ள அமித்ஷா தமிழகம் வருகிறார். இந்த வருகைக்கு முன்பாகவே, கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முடித்து, தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்ய வேண்டும் என்பதில் பியூஷ் கோயல் தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி காலம் தாழ்த்தி வருவதாகவும், கூட்டணி கட்சிகளை முன்கூட்டியே முடிவு செய்து பேச்சுவார்த்தை தொடங்கினால் அதிமுக மீது கூடுதல் அழுத்தம் வரும் என அவர் கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக மாநாட்டுக்குப் பிறகே தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்பதால்தான், விஜயகாந்த் குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு நெருக்கத்தை வெளிப்படுத்தினார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சூழ்நிலையில், அமித்ஷா வருகைக்கு முன் பியூஷ் கோயல் திட்டமிட்டபடி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க முடியுமா, அல்லது தேமுதிக முடிவுக்காக அதிமுக காத்திருக்குமா என்பது தமிழக அரசியலில் முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Piyush Goyal plans to close the deal with AIADMK before Amit Shah visit Will he give in to EPS What going on


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->