அரசியல் புயல் மத்தியில் நாளை கூடும் பாராளுமன்றம்...!- சூடான விவாதம் எதிர்பார்ப்பு
Parliament meet tomorrow amid political storm Heated debate expected
இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கி அரசியல் சூழலை பரபரப்பாக்கியது.
அதன் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தாலும், அந்த காலகட்டம் முழுவதும் ஆட்சியும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக மோதிய அரசியல் அரங்கமாகவே மாறியது.முதல்கட்ட அமர்வின் போதே, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.

இந்த விவகாரம் பாராளுமன்றத்தை பலமுறை அமளிக்குள் தள்ளியது.இதனுடன், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம். எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதை நூலைச் சுற்றிய சர்ச்சை, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், உலகளவில் பெரும் கவனம் பெற்ற எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் போன்ற பல்வேறு அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சனைகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து மத்திய அரசை சிக்கலில் நிறுத்த முயன்றன.
கடந்த 3 ஆம் தேதி மக்களவையில் நிலைமை மேலும் தீவிரமடைந்தது. எதிர்க்கட்சியினர் சிலர் காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ஒழுங்கு மீறியதாக தெரிவித்து 8 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்தார்.
இதற்கிடையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முழுமையாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரும் நோட்டீஸை தாக்கல் செய்துள்ளன.
இந்த அரசியல் பரபரப்பான சூழலில் பாராளுமன்றத்தின் இரண்டாவது கட்ட பட்ஜெட் அமர்வு நாளை தொடங்குகிறது. இந்த அமர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கூட்டத்தின் முதல் நாளிலேயே மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீது கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்க தீர்மானம் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்களான முகமது ஜாவத், கே. சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் முன்மொழிகிறார்கள்.
இந்த முக்கியமான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் நாளில் அனைத்து எம்.பி.க்களும் அவையில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜ.க.வும் காங்கிரஸும் தங்களது உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.இந்திய அரசமைப்பு சட்டத்தின் 94(சி) பிரிவின்படி பெரும்பான்மை வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
தற்போதைய எம்.பி.க்கள் பலத்தை கணக்கில் எடுத்தால், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் இருப்பதால் தீர்மானம் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.கடந்த காலங்களில் மக்களவை சபாநாயகர்களாக இருந்த ஜி.வி. மாவலங்கர் (1954), ஹூக்கம் சிங் (1966), பல்ராம் ஜாக்கர் (1987) ஆகியோரும் இதுபோன்ற நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் அவற்றில் எதுவும் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மேற்கு ஆசியாவின் பதற்றமான நிலை, இந்தியப் பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விவகாரம், ரஷிய கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தம் போன்ற பல சர்வதேச மற்றும் அரசியல் பிரச்சனைகளை எழுப்பி அரசை சிக்கலில் நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வும் கடும் அரசியல் வாதப்போருடன், பலத்த அமளி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.
English Summary
Parliament meet tomorrow amid political storm Heated debate expected