ஒரு கோடி.. இலங்கை நீதிமன்றத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அந்த நீதி விரைந்து கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஆனால், நீதிமன்றங்களே அநீதியான தீர்ப்பை வழங்கும் நடைமுறை இலங்கை நாட்டில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து 23-03-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு அண்மையில் இலங்கை நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், . அவர்கள் சிறையில் இருந்து வெளி வர நினைத்தால் ஒவ்வொரு மீனவரும் தலா ஒரு கோடி ரூபாய் செலுத்திவிட்டு பிணையில் செல்லலாம் என்று உத்தரவிட்டது. இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் நீதிக்குப் புறம்பானது. இந்தத் தீர்ப்பினை கேட்டு தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது மிகப் பெரும் அநீதியை இழைத்துள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் க்டும் கண்டனத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீன்பிடித் தொழில் என்பது மீனவ மக்களின் வாழ்வாதாரம். இந்தத் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தை வைத்துத்தான் மீனவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள். இலங்கைக் கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும், சிறைபிடித்தலுக்கும் இடையே மீன்பிடித் தொழிலை தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய வறுமைதானே தவிர வேறு ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் கேட்பது என்பது அநியாயத்தின் உச்சகட்டம். இந்த அளவுக்கு பிணைக் கட்டணம் செலுத்தக்கூடிய சக்தி மீனவர்களிடம் இருந்திருந்தால், அவர்கள் இந்தத் தொழிலையே மேற்கொள்ளமாட்டார்கள். ஒரு கோடி ரூபாய் பிணைக் கட்டணத்தை தமிழக மீனவர்களால் செலுத்தவே இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை .

ஒருவேளை இலங்கை நாட்டில் உள்ள தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்த அளவுக்கு பிணைத் தொகை செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கலாம். அதே சமயத்தில், அந்தத் தொகையை செலுத்தக்கூடிய சக்தி மீனவர்களுக்கு இருக்கிறதா என்பதையும் நீதிமன்றம் ஆராய வேண்டும். இலங்கை நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றால், அதற்குத் தேவையான நிதி உதவியை பிற நாடுகளிடமிருந்து ராஜ தந்திர முறையில் கேட்டுப் பெற வேண்டும். அதைவிடுத்து, இதுபோன்று அநியாயமாக ஏழை மீனவ மக்கள்மீது தண்டம் விதிப்பது ஏற்கத்தக்கதல்ல, இதை ஏழை மீனவர்களால் செலுத்தவும் முடியாது. இலங்கைக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் நாடு இந்தியா. இப்படிப்பட்ட உதவி செய்கின்ற நட்பு நாடான இந்திய நாட்டு மீனவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்வதும், - அவர்களைத் துன்புறுத்துவதும், சிறைபிடிப்பதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவதும் செய்நன்றி மறத்தலாகும்.

தமிழக மீனவர்களை மத்திய அரசு உதவியுடன் விரைவில் மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை நாட்டு சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உதவியுடன் மேற்கொள்ள வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops statement on apr 12


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->