பட்டியலில் எங்களுடைய சங்கம் எங்கே? கொந்தளிக்கும் ஓபிஎஸ்.!
OPS SAY ABOUT ANNA THOZHISANGAM
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப் படி உயர்வு, ஓய்வு காலப் பயன்கள், மருத்துவக் காப்பீடு போன்ற நியாயமான கோரிக்கைகள் குறித்து பலமுறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் ஒரு முடிவு காணப்படவில்லை.

இந்த நிலையில், போக்கு வரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த உடன், தொழிற்சங்கத்தினருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கிட்டத்தட்ட ஏழு மணி நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின் பேட்டி அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற் சங்கங்கள் வைக்கின்ற கோரிக்கைகளால் கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்று தெரிவித்து, நிதித் துறையுடன் கலந்து பேசிய பின் அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிவித்து இருக்கிறார்.
அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை தேதியை கூட குறிப்பிடாதது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பேச்சு வார்த்தையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதன் மூலம் தொழிலாளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி, அவர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம் என்று அரசு நினைக்கிறதோ என்ற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணை ஏற்படுத்திட, நிர்வாக மற்றும் தொழிற்சங்க பிரதி நிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளதையும், அதில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இடம்பெறாததையும் பார்க்கும் போது, ஊதிய ஒப்பந்தத்தை மேலும் தாமதப்படுத்தி, அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள தொழிற்சங்கங்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள அரசு நினைக்கிறதோ என்ற ஐயமும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. இந்தக் குழுவைக் காரணம் காட்டி ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை தாமதப் படுத்துவது என்பதும், மேற்படி குழுவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையை இடம் பெறச் செய்யாதது என்பதும் கண்டிக்கத்தக்கது.
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் முதல்-அமைச்சர் அழைத்துப் பேசி உடனடி தீர்வு காணவும், நிலையாணை தொடர்பான குழுவில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை இடம் பெறுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
OPS SAY ABOUT ANNA THOZHISANGAM