நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. திமுகவினரின் அராஜகம்.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கடும் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்றிவரும் திமுக-வினரின் அராஜகத்திற்குக் கடும் கண்டனம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை மிரட்டுவது; காவல் துறையை வைத்து கைது செய்வது; வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை விநியோகிப்பது; வெளியூர் ஆட்களை வைத்து வன்முறையில் ஈடுபடுவது என்று, திமுக நடத்தும் சதிச் செயல்கள் மீண்டும் அரங்கேறுகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நேற்று (17.2.2022) மாலையுடன் ஓய்ந்துவிட்ட நிலையில், கோயம்புத்தூர் மாநகரிலும், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் திமுக-வினர் ஈடுபட்டிருப்பது சம்பந்தமாக, கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், கோவை மாநகர காவல் ஆணையருக்கும் புகார் அளித்தும், இது குறித்து காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கோவை மாவட்டம் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்துள்ள நிலையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியில், கழகம் மகத்தான வெற்றி பெறும் என்ற தகவலை தெரிந்துகொண்ட திமுக-வினர், அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வரும் கோவை மாநகரத்தை தற்போது கலவர பூமியாக மாற்றி உள்ளனர்.

கரூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகள் மற்றும் குண்டர்கள் கோவை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியும், பொதுமக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து திமுக-வினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பரப்புரை நேரம் முடிந்தவுடன், தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என்ற விதிமுறையை மீறி, கோவை மாநகர் முழுவதும் வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்ட ரவுடிகள் மற்றும் குண்டர்கள் வாக்குப் பதிவை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இது, சட்ட விரோதமானது.

இதுகுறித்து, கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்கள் தலைமையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், கோவை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை திமுக-வினர் வழங்கி வருவதாகவும், பல மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

கோவை மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ள, வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ரவுடிகள் மற்றும் குண்டர்களை உடனடியாகக் கைது செய்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, திமுக-வினரால் நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தாமல், மெத்தனப் போக்கில் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

திமுக-வினரின் மேற்கண்ட அராஜக செயல்கள் அனைத்திற்கும் எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, திமுக-வினருக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும் முறையாக நடைபெறுவதற்கும்; வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps statement for dmk govt


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->