மின் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு; தவெக அரசை சாடிய சீமான்
Opposition to outsourcing electricity billing tasks Seeman slams the TVK government
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பணியாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி மின் கணக்கீட்டுப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தீர்வாகாது என்றும், அனுபவமற்ற பணியாளர்களை கணக்கீட்டுப் பணியில் ஈடுபடுத்தினால் ஏற்கனவே உள்ள குளறுபடிகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் கடத்தல், மின் விநியோகம் மற்றும் மின் நுகர்வு கணக்கீடு உள்ளிட்ட முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக மின் கணக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மின் கணக்கீட்டுப் பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க டெண்டர் விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மின்துறையின் பணிகளை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சீமானும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், பணியாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி மின் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். மின்சாரம் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய அடிப்படைத் தேவை என்பதால், அதன் பயன்பாட்டைக் கணக்கிடும் முக்கியமான பணியை தனியாரிடம் ஒப்படைப்பது எவ்வாறு நியாயமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்றால், காலியாக உள்ள பணியிடங்களை அரசு ஏன் இதுவரை நிரப்பவில்லை என்றும், நிர்வாகக் குறைபாட்டை சரிசெய்வதற்குப் பதிலாக அரசுப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது எப்படி தீர்வாகும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு வேலைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களை உருவாக்காமல் ஒப்பந்த முறையில் பணிகளை தனியாரிடம் வழங்குவது அரசின் வேலைவாய்ப்புக் கொள்கையா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அனுபவமிக்க மின்வாரிய பணியாளர்கள் மேற்கொண்ட கணக்கீடுகளிலேயே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அனுபவமற்ற தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று கணக்கீடு செய்தால் தவறான கணக்கீடுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கணக்கீடு தாமதமானால் பொதுமக்களுக்கு அதிக மின் கட்டணம் விதிக்கப்படும் சூழல் உருவாகுமா, தவறான கட்டணம் விதிக்கப்பட்டால் மக்கள் தனியார் நிறுவனத்திடமா அல்லது அரசிடமா முறையிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் நிறுவனங்களிடம் மின் நுகர்வோர் தொடர்பான பணிகளை ஒப்படைக்கும்போது பொதுமக்களின் நுகர்வு விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதற்கான தீர்வு புதிய பணியாளர்களை நிரந்தரமாக நியமிப்பதுதானே தவிர, தனியார்மயம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 3.5 கோடி குறைந்த மின்னழுத்த மின் இணைப்புகள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 2.5 கோடி வீட்டு மின் இணைப்புகள் என்றும் குறிப்பிட்ட சீமான், கோடிக்கணக்கான மக்களுடன் நேரடியாக தொடர்புடைய மின் கணக்கீட்டுப் பணிகளுக்கு போதிய நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல் தற்காலிக ஒப்பந்த முறையை தேர்வு செய்வது தவறான நிர்வாக நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.
மேலும், இன்று மின் கணக்கீட்டுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வாரியத்தின் பிற பணிகளும் தனியார்மயமாக்கப்படுமா என்ற கேள்வி எழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மின் கணக்கீட்டுப் பணிகளை தனியார் ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட மின்வாரியத்தின் காலிப் பணியிடங்களை வெளிப்படையான தேர்வு முறையில் தகுதியான தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Opposition to outsourcing electricity billing tasks Seeman slams the TVK government