அதிரடி திருப்பம்! பழைய பகை முடிந்து புதிய பயணம்...! தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் தினகரன் இணைவு...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கொந்தளிப்பான சூழலில் காய்ந்து கொட்டுகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள தேர்தலில், ஆளும் திமுக தனது அதிகாரக் கோட்டையை காக்கத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுக, ஆட்சியை மீட்டெடுக்கப் போர்க்கொடி உயர்த்தி தேர்தல்களத்தில் குதித்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல அரசியல் அணிகள் ஒரே வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதற்கிடையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தனி பாதையில் பயணிக்கிறது.

புதிய அரசியல் வரவாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு அழைப்பு விடுத்தாலும், “முதல்வர் வேட்பாளர் விஜய்தான்” என்ற முழக்கத்தோடு தன்னம்பிக்கையுடன் களமிறங்கத் தயாராகி வருகிறது.

இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரசார பொதுக்கூட்டம் வரும் 23-ந்தேதி மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். கூட்டணி கட்சித் தலைவர்கள் மேடையேறுவதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் கூட்டணியை இறுதியாக உறுதிப்படுத்தும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன. மேலும் தேமுதிக, அமமுக ஆகியவற்றை கூட்டணியில் சேர்க்க தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் பரவுகின்றன.

இந்த நிலையில், அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை விட்டு விலகிய நிலையில், இப்போது மீண்டும் இணைவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,“2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக – பாஜக கூட்டணியுடன் இணைந்து சந்திக்கிறோம். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்குவதே எங்கள் இலக்கு.

பழைய விரோதங்களை நினைத்து கட்சிக்கும் மாநில நலனுக்கும் பின்னடைவு ஏற்படுத்தக் கூடாது. எங்களுக்குள் நடந்தது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை,” எனக் கூறினார்.

மேலும், “இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்ற வள்ளுவர் வாக்கியத்தை நினைவுகூர்ந்து, நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் நல்லாட்சி மலர உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி அளித்தார்.இதனைத் தொடர்ந்து, பாஜக மேலிட பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old animosities end new journey begins Dhinakaran rejoins the National Democratic Alliance


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->