தினகரனுக்கு ஓகே! ஆனா ஓபிஎஸ்க்கு நோ! எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் பெயரை கேட்டாலே ஏன் அத்தனை கோபம்!இதுதான் காரணமா?
Okay for Dinakaran But no for OPS Why is Edappadi Palaniswami so angry just by hearing the name of OPS Is this the reason
டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என்று நீண்ட காலமாக கூறி வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தற்போது டிடிவி தினகரனை மட்டும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொண்டுள்ளார். ஆனால், ஓபிஎஸ்ஸை அதிமுகவிற்குள் மீண்டும் சேர்ப்பதற்கு அவர் கடுமையாக மறுப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட கடும் உட்கட்சி மோதல்கள், கட்சியை பல பிரிவுகளாகப் பிளந்தன. இதன் தொடர்ச்சியாக வி.கே. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரட்டைத் தலைமையாக கட்சியை வழிநடத்தினர். ஆனால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோஷம் எழுந்தபோது, ஓபிஎஸ் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடினார். இதன் விளைவாக 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, அதிமுகவின் பொதுச் செயலாளராக அதிகாரம் செலுத்தத் தொடங்கினார். வெளியேற்றப்பட்டவர்களில் டிடிவி தினகரன் மட்டும் தனிக்கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (AMMK) தொடங்கினார். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமியை “துரோகி” என்று கடுமையாக விமர்சித்த தினகரன், தற்போது அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், அதிமுக ஒற்றுமை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகம்” என்ற அமைப்பை உருவாக்கி, கட்சியை ஒருங்கிணைக்க முயற்சித்து வந்தார். அவர் திமுகவோ அல்லது தவெகவோ இணைவார் என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரங்களில் அடிபட்டன.
இந்த சூழ்நிலையில், பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “நான் அதிமுகவில் சேர தயாராக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஓபிஎஸ்ஸின் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி உடனடியாக நிராகரித்தார்.
அரசியல் வட்டாரங்கள் கூறுவதாவது, கட்சியின் முழு கட்டுப்பாடும் தன்னிடமே இருக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் முக்கிய இலக்கு. தினகரன் தனிக்கட்சியின் தலைவர் என்பதால், அவரை கூட்டணியில் சேர்த்தாலும் அதிமுகவின் உள் அதிகார அமைப்பில் தலையிட முடியாது. எனவே, தினகரன் ஒரு “வெளிப்புற கூட்டணி பங்குதாரர்” மட்டுமே என எடப்பாடி கணக்குப் போடுகிறார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவுக்குள் வந்தால், இரட்டைத் தலைமை விவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சம் எடப்பாடிக்கு உள்ளது. மேலும், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் வரை சென்ற சட்டப் போராட்டங்கள், கட்சி அலுவலகம் தொடர்பான பழைய சம்பவங்கள் ஆகியவை, ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமிக்குள்ள தனிப்பட்ட அரசியல் விரோதத்தை அதிகரித்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் உள்ள சமூக வாக்கு வங்கியை பாதுகாக்க தினகரன் போதுமானவர் என்றும், இனி ஓபிஎஸ்ஸின் ஆதரவு அவசியமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில்தான், தினகரனை கூட்டணியில் ஏற்றுக் கொண்டு, ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அரசியல் நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Okay for Dinakaran But no for OPS Why is Edappadi Palaniswami so angry just by hearing the name of OPS Is this the reason