ஒடிசா பாலியல் வன்கொடுமை பாஜக அமைப்பின் கொலை! - கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி
Odisha murder by BJP organization Rahul Gandhi condemns
ஒடிசாவில் பாலசோர் நகரிலுள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும்,பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம், ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகாரளித்தார். மேலும், அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். ஆனாலும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.

அதைத்தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இதைத்தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார்.
மருத்துவமனையில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.இந்நிலையில் புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து,கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி:
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, "ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை. தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை.
மாறாக அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார். அவளை பாதுகாக்க வேண்டியவர்களே அவளை சுக்குநூறாக உடைத்தார்கள்இது தற்கொலை அல்ல. இது அமைப்பின் திட்டமிட்ட படுகொலை. மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள். நாட்டிற்கு உங்கள் மௌனம் தேவையில்லை. பதில்தான் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Odisha murder by BJP organization Rahul Gandhi condemns