'இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது'...! அமோனியா கசிவு விபத்து...! - விசாரணைக் குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வைகோ அதிரடி கோரிக்கை...!
Not single life should be lost Ammonia leak accident Vaiko demands immediate implementation investigation committee recommendations
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஷவாயுவை சுவாசித்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், சிலருக்கு வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மேலும், அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருவது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.
இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் குறித்து பொது நல அமைப்புகள் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளன. உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும், அதிகாரிகளின் அலட்சியமும் ஆலை நிர்வாகத்தின் பொறுப்பின்மையும் காரணமாக இன்று தொழிலாளர்களின் உயிரே பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விசாரணைக்கு உத்தரவிட்டு, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதார கூடுதல் இயக்குநர் ஆகியோரை கொண்ட 3 பேர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழு 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை அரசு முழுமையாக பரிசீலித்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த வடமாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நட்டஈட்டை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.அதேபோல், தற்போது சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காக்க தமிழக அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.”இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
English Summary
Not single life should be lost Ammonia leak accident Vaiko demands immediate implementation investigation committee recommendations