மாணவர்களுக்குப் பதில் 'நீட்' தேர்வு எழுதிய டாக்டர்கள்...! பீகாரில் அம்பலமான மெகா மோசடி...! சிக்கியது எப்படி...?
Doctors wrote NEET exam students Mega scam exposed Bihar How caught
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நீட் தேர்வு முறைகேடு விவகாரம் மீண்டும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டால் கடந்த மே 3, 2026 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று நாடு முழுவதும் NEET-UG மறுதேர்வு கடுமையான கண்காணிப்பு மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.
இந்த பரபரப்பான சூழலில், பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் மிகப்பெரிய ஆள்மாறாட்ட மோசடி வலையமைப்பு அம்பலமாகியுள்ளது. உண்மையான தேர்வர்களுக்குப் பதிலாக போலி தேர்வர்களை அமர்த்தி தேர்வு எழுதச் செய்யும் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி வழக்கில் மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவர்கள் மற்றும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 24 பேரை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று லக்கிசராயில் உள்ள ஹசன்பூர் உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்குள் மயங்க் கஷ்யப் என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் நுழைந்துள்ளார்.
தேர்வு மைய ஊழியர் போல போலி அடையாள அட்டையை அணிந்து அவர் உள்ளே சென்றது ஆரம்பத்திலேயே சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, அவரை மடக்கிப்பிடித்த காவலர்கள் விசாரணை நடத்தியபோது, அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வரும் மாணவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், அதே மாலை லக்கிசராயில் உள்ள கே.ஆர்.கே பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா தேர்வு மையங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தன.
உயர்கல்வி பயிலும் மருத்துவ மற்றும் நர்சிங் மாணவர்கள் பலர் இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடையவர்கள் என்பது உறுதியானது. கயா பகுதியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் இந்த ஆள்மாறாட்ட கும்பலின் முக்கிய மூளையாக இருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.மேலும், அவர் ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு நடந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கிலும் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பது புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி, ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர், டெல்லி ஷாதரா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர், நாலந்தா மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் போலி அடையாள அட்டைகளுடன் தேர்வு மையங்களில் சிக்கியுள்ளனர்.
அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்த மோசடி வலையமைப்புக்கு உள் ஆட்களின் ஆதரவும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வு மையங்களில் கைரேகை மற்றும் முக அடையாள சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த பயோமெட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த 14 ஊழியர்கள் பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க பீகாரில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், தேர்வு நேரத்தில் மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பொய்யான காரணம் கூறி பாட்னா மருத்துவக் கல்லூரி மாணவர் மயங்க் கஷ்யப் இந்த மோசடி வலையில் இணைந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடி வலையமைப்பின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனர்? யார் இந்த கும்பலின் உண்மையான மூளைகள்? இதன் பின்னணியில் பெரிய நிதி வலையமைப்பும் செல்வாக்கு மிக்க நபர்களும் உள்ளனரா? என்ற கோணங்களில் பீகார் காவலர்கள் தற்போது தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
English Summary
Doctors wrote NEET exam students Mega scam exposed Bihar How caught