மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு! 2031-ல் பாமக ஆட்சி!அன்புமணியின் அதிரடி முடிவு!அதிரும் அரசியல் களம்!
No Union Minister post Tamil Nadu is the target PMK to rule in 2031 Anbumani bold decision The political arena is abuzz
மத்திய அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்றும், 2031-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை அமைப்பதே தங்களது முதன்மை இலக்கு என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாமகவை சாதிக் கட்சி என்று விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். இந்த மாற்றம் பாமக போன்ற கட்சிகளுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சினைகளை புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“2031-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தீவிரமாக களப்பணி செய்து வருகிறோம். தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று அன்புமணி தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை குறித்தும் அன்புமணி விரிவாக பேசினார். தமிழ்நாட்டுக்கு நியாயமான தொகுதி மறுவரையறை நடைபெற வேண்டும் என்றும், தற்போதுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் 59 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஒரு எம்.பி.க்கு அதிகமான மக்கள் தொகை இருப்பதாகவும், மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதை நினைவுகூர்ந்தார்.
அப்போது பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், “மீண்டும் மத்திய சுகாதார அமைச்சராக வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு அன்புமணி, “இல்லை, இல்லை… அப்படி இல்லை. எங்களுடைய இலக்கு தமிழ்நாடு தான்” என்று பதிலளித்துள்ளார்.
“2031-ல் பாமக ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு–கர்நாடக மாநில மக்களை தண்ணீர் பிரச்சினையை அடிப்படையாக வைத்து பிரிக்கக் கூடாது என்றும், அரசியல் ரீதியாக இரு தரப்பினரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.
English Summary
No Union Minister post Tamil Nadu is the target PMK to rule in 2031 Anbumani bold decision The political arena is abuzz