அரசியலில் புதிய திருப்பம்! அ.தி.மு.க.வை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர்…கு.ப. கிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவு...! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் குழுமணி பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், தமிழக அரசியலில் பல திருப்பங்களைக் கண்ட அனுபவமிக்க தலைவர். 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் ஆரம்ப காலத்திலேயே இணைந்து, களப்பணிகளால் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஜானகி – ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் உறுதியாக நின்றார். 1991ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

பின்னாளில் கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.க.விலிருந்து விலகிய அவர், 2001ஆம் ஆண்டு ‘தமிழர் பூமி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனால் அந்த முயற்சி நீடிக்கவில்லை. தொடர்ந்து தே.மு.தி.க.வில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்த அவர், பின்னர் மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.விற்கு திரும்பினார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ். தலைமையிலான அணியில் இணைந்து செயல்பட்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அரசியலில் அமைதி காத்தார்.

இந்நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.ப. கிருஷ்ணன்,“அ.தி.மு.க. ஒன்றிணைய பல முயற்சிகள் நடந்தாலும் எதுவும் நிறைவேறவில்லை. இப்போது அந்தக் கட்சி பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களைக்கூட பயன்படுத்தத் தயங்குகிறார்கள்.

ஆனால் விஜய் அவர்கள் எங்கள் தலைவர்களை மேடையில் உயர்த்திப் பேசுகிறார். அவர்களது ஆட்சியை மீண்டும் தருவேன் என உறுதி கூறுகிறார்.எனக்கு பதவி ஆசை இல்லை. மக்கள் இருக்கும் பக்கம்தான் என் பக்கம்.

விஜய்யுடன் பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி,” என்றார்.மேலும்“2026ல் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுக்க முடியாது. களம் தான் முடிவை சொல்லும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new twist politics Former minister KP Krishnan who left AIADMK joins tvk


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->