'கோவை, மதுரை மெட்ரோ சேவை தாமதம்: திமுக அரசு மெத்தனம் காட்டியதே காரணம்': நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு..!
Nayinar Nagendran blames DMK governments laxity for Coimbatore and Madurai metro service delays
கோவை மற்றும் மதுரை மெட்ரோ பணிகளில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி, மெத்தனம் காட்டுவதாகப் திமுக அரசு போலியாக குற்றஞ்சாட்டி வருகிறதாகவும், கோவை, மதுரை மெட்ரோவைத் தாமதப்படுத்துவது திமுக அரசின் மெத்தனமே..! என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''கோவை மற்றும் மதுரை மெட்ரோ பணிகளில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி, மெத்தனம் காட்டுவதாகப் போலியாக குற்றஞ்சாட்டி வருகிறது திமுக அரசு. உண்மையில் மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்காமல் இழுத்தடித்ததோடு, காலம் தாழ்ந்து சமர்ப்பித்த உடன் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்காது ஆரம்பத்தில் இருந்தே மெத்தனம் காட்டியது திமுக அரசு தான்.

காலந்தாழ்த்தி திமுக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் என்னென்ன கூறப்பட்டுள்ளன எனத் தெரியுமா? சென்னையைக் காட்டிலும் கோவையில் அதிக பயணிகள் வருவர் என தவறான தகவல் கூறப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தால் பெரிய அளவில் நேரச் சேமிப்பு இல்லை என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளது.
கோவையில் மெட்ரோவால் அதிக அளவில் பொதுமக்களின் சொத்துகளை இடிக்க நேரிடும் அளவிற்கு அறிக்கையை வடிவமைத்துள்ளது. மெட்ரோ பாதை அமைக்க 22 மீட்டர் அகலம் தேவைப்படும் வேளையில், கோவையில் உக்கடம், பெரிய கடை வீதி, ஸ்டேட் பேங்க் ரோடு, காந்திபுரம் போன்ற குறுகிய சாலைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது திமுக அரசு. இதனால், மற்ற போக்குவரத்திற்கும், உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் இடமே இருக்காது.

சாத்தியமற்ற தகவல்
மதுரையில் உள்ள பயணிகளின் எண்ணிக்கைக்கு Bus Rapid Transit System போதுமானது என்று குறிப்பிட்டு மதுரை மக்களை வஞ்சித்துள்ளது. மூன்றே ஆண்டுகளில் மெட்ரோ பணி முடிக்கப்பட்டுவிடும் என சாத்தியமற்ற தகவலையும் கூறியுள்ளது. இப்படி மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தப்பும் தவறுமாக தயாரித்து, அவசரகதியில் சமர்ப்பித்துள்ளது திமுக அரசு. அதிலுள்ள தவறுகளை வெளிப்படுத்தி, கூடுதல் தகவல் கேட்டு மத்திய அரசு திருப்பியனுப்பியதும், ரத்து செய்துவிட்டதாகப் போலியாக நாடகமாடி வருகிறது திமுக அரசு.
உண்மையில், கூடுதல் தகவல் கேட்டு, கொடுத்த அறிக்கையைத் திரும்ப அனுப்புவதும், சரியான தகவல்கள் கிடைத்ததும் அங்கீகரிப்பதும் வழக்கமான ஒரு அரசு நிர்வாக நடவடிக்கையே. மெட்ரோ குறித்து இன்று போலி அக்கறையுடன் பொங்கியெழும் திமுகவினர், அன்று இதே அக்கறையுடன் திட்ட அறிக்கையைத் தயார் செய்திருந்தால், என்றோ கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ வந்திருக்கும். இப்போது கூட, தக்க தகவல்களுடன் DPR தெளிவாக சமர்ப்பிக்கப்படும் போது, இந்த இரு மெட்ரோவுக்கும் எளிதாக அனுமதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
மடைமாற்ற அரசியல்
இதையெல்லாம் செய்வதை விடுத்து தனது மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோவைக் கையிலெடுத்து, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது போல பொய்யுரையைப் பரப்பி குளிர் காய முயற்சிக்கிறது திமுக அரசு. மக்களின் போக்குவரத்தின் மீது பெரிதும் அக்கறை கொண்டு இருப்பின், தமிழகத்திற்கு PM eBus sewa திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்குவதாக இருந்த 10,000 குளிரூட்டப்பட்ட மின் பஸ்களை திமுக அரசு மறுத்திருக்குமா?
உண்மையில், மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாட, மக்கள் முன்னேற்றத்தைப் பறித்து வருகிறது திமுக அரசு. கோவை மற்றும் மதுரையின் வளர்ச்சி மீது உண்மையாக அக்கறை கொண்ட மக்கள், திமுகவின் இந்த மடைமாற்ற அரசியலுக்கு ஒருபோதும் மனம் மயங்க மாட்டார்கள்! திமுகவின் பிளவுவாத அரசியலுக்குத் துணைநிற்கவும் மாட்டார்கள்.'' என்று பாஜக மணிலா தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
English Summary
Nayinar Nagendran blames DMK governments laxity for Coimbatore and Madurai metro service delays