பருவமழை வெளுத்து வாங்கும் நேரத்தில், திமுக அரசு மொத்த கவனத்தையும் சாராய விற்பனையில் திருப்பியுள்ளது; நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு..!
Nayinar Nagendran accuses the DMK government of diverting the entire attention of the government machinery towards the sale of liquor
டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா?'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் 789 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதாரண நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தில், பண்டிகை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, மக்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்துவிடுமோ என நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்ட திமுக அரசும் அதை இயக்கும் முதல்வர் ஸ்டாலினும் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.
அதுவும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்..?
மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 90% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிய சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது, முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விளைவித்த பயிர்கள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப் போயுள்ளது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிர்களும் சேதமாகியுள்ளது.
ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா?'' என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
English Summary
Nayinar Nagendran accuses the DMK government of diverting the entire attention of the government machinery towards the sale of liquor