சாமி நாகப்ப படையாட்சியாருக்கு மணிமண்டபம் - தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் தென் ஆப்பிரிக்கா சத்தியாகிரக போராட்ட வீரர் சாமி நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு மணிமண்டபத்துடன் கூடிய முழு உருவ சிலை அமைத்து அவரை கௌரவ படுத்த வேண்டும்" என்று பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "மகாத்மா காந்தி அடிகள் அவர்கள் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் ஒரு வழக்கறிஞராக அங்கு இருந்தாலும், தென்னாப்பிரிக்காவில் இனவெறி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியதன் மூலம் ஒரு தலைவராக உருவெடுத்தார்.

அந்த காலகட்டத்தில் தான் சத்தியாகிரகம் என்ற அவரது போராட்ட முறை உருவானது. 1893-ஆம் ஆண்டில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, வழக்கறிஞர் வேலைக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு குடியேறிய இந்தியர்கள் மற்றும் கருப்பின மக்கள் மீதான பாகுபாடுகளைக் கண்டு, அதற்கு எதிராகப் போராடத் தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் மற்றும் கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராட, காந்தி "சத்தியாகிரகம்" என்ற அகிம்சை வழியைப் பின்பற்றினார். இது ஒரு புதிய போராட்ட முறையாக இருந்தது.

காந்தி, தென்னாப்பிரிக்காவில் பல போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக பீனிக்ஸ் என்ற இடத்தில் குடியேற்றத்தை உருவாக்கி, அங்கிருந்து தனது போராட்டங்களை வழிநடத்தினார். அந்தப் போராட்ட காலகட்டத்தில் அவருக்கு ஆதரவாக இந்தியர்கள் பலர் களம் இறங்கினர். அவர்களில் மிக முக்கியமானவர் தமிழ்நாட்டைச் சார்ந்த மயிலாடுதுறை அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் என்ற கிராமத்தைச் சார்ந்த சுவாமி நாகப்ப படையாட்சி என்பவராவார்.

நாகப்ப படையாட்சி காந்தி அவர்களுடன் சேர்ந்து சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது காவல்துறையின் தடியடி பிரயோகத்தில் காந்தியடிகள் மீது அடி விழாமல் அவர் மீது விழுந்து அனைத்து அடிகளையும் வாங்கியவர் சாமி நாகப்ப படையாட்சியார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அவருக்கு வயது 18 தான். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் நாகப்பன் படையாட்சி குளிர் பிரதேசம் பகுதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் அவருக்கு நிமோனா காய்ச்சல் ஏற்பட்டு சிறையில் இருந்து வெளிவந்த ஒரு வார காலகட்டத்தில் உயிரிழந்தார். அவருடைய இறப்பிற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என அதற்கென்று தென்னாப்பிரிக்காவில் பெரியதோர் கிளர்ச்சி எழுந்தது. அப்பொழுது போராட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து இந்தியா திரும்பிய காந்தியடிகள் அவர்கள் முதன் முதலாக சந்திக்க விரும்பிய குடும்பம் நாகப்ப படையாட்சி குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்வாரே அவர் மயிலாடுதுறை வந்து நாகப்ப படையாட்சியாரின் குடும்பத்தை சந்திக்க முற்பட்ட பொழுதும் அவரது வாரிசு தாரர்கள் இருந்தும் அவர்களை காந்தியடிகளிடம் அடையாளம் காட்டிட கூடாது என்ற தீய நோக்கத்தில் நாகப்ப படையாட்சியாரின் வாரிசுதாரர்கள் யாரும் தற்போது இல்லை என காரணம் காட்டி காந்தியடிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஆனால் பிற்காலத்தில் மயிலாடுதுறை பகுதி வாழ் மக்கள் நாகப்படையாட்சியாரின் சத்தியா கிரக போராட்டத்தை மனதில் நிறுத்தி அவர்களின் புகழினை பரப்ப துவங்கினர். பிறகு 1972 வாக்கில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் நோக்கில் மிதவை பேருந்துகளுக்கு அவரது பெயரினை சூட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நானும் 1980-ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு ஏற்படுகின்ற பொழுதெல்லாம் சாமி நாகப்படையாட்சியார் அவர்களுக்கு உருவ சிலையும், மணிமண்டபமும் கட்டி அவர் பெயர் காலம் உள்ளவரை நிலைத்திருக்க அவரை கௌரவப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தேன். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவில் நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு விரைவாக மயிலாடுதுறை நகரின் முக்கிய சந்திப்பு பகுதியில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

இந்த நிகழ்வுதனை தொடர்ந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன் அவர்களுக்கும் அதனை முதல்வரின் கவனத்திற்கு விரைவாக கொண்டு சேர்த்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும் எனது பாராட்டுதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் முதல் சத்தியா கிரக போராட்டத்தில் உயிர் நீத்த நாகப்ப படையாட்சியார் அவர்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் மூன்று தலை நகரங்களில் அடங்கியுள்ள மிகப்பெரிய நகரமான ஜோகானஸ்பர்க் பகுதியில் சாமி நாகப்ப படையாட்சி அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எனவே இவைகளை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணிமண்டபத்துடன் கூடிய முழு உருவ சிலை அமைத்தால் இன்னும் அவருக்குப் பெருமை சேர்த்ததாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு மணிமண்டபத்துடன் கூடிய சிலை அமைப்பு தனை நடத்திட இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nakappa padayachi Manimandapam Ramadoss PMK 


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->