700 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியரா? அரசுப் பள்ளி மாணவர்களின் மீது அடக்குமுறை; நயினார் நாகேந்திரன் கண்டனம்..!
Nainar Nagendran condemns the ratio of one physical education teacher for 700 students in government schools
''கல்விக் கூடங்களில் மாணவர்களின் ஒழுக்கத்தை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அரசு சமரசம் செய்யக்கூடாது எனவும், பழைய நடைமுறையின் படியே உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் தொடர வேண்டும் தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''அரசுப் பள்ளி மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை முடக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் சுமார் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என மாற்றுமாறு, முந்தைய திமுக அரசு பிறப்பித்த அதே அரசாணையை தற்போதைய தவெக அரசும் முன்மொழிவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
அதிகளவிலான கட்டணம் செலுத்தி தனியாரிடம் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் செல்ல முடியாத அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன்களைத் துல்லியமாகக் கணித்து, போட்டிகளில் அவர்களின் பங்கேற்றலை உறுதி செய்யும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அரசு குறைக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை.
தவெக அரசின் இந்த தவறான அணுகுமுறையால், 700 மாணவர்களுக்கு கீழ் இருக்கும் சில கிராமப்புற பள்ளிகளின் மீது உடற்கல்வி ஆசிரியரின் நிழல் கூட படாமல் போய்விடும் என்பது எவ்வளவு பெரிய உரிமை மீறல்? இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா?.
கல்விக் கூடங்களில் மாணவர்களின் ஒழுக்கத்தை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அரசு சமரசம் செய்யக்கூடாது எனவும், பழைய நடைமுறையின் படியே உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் தொடர வேண்டும் எனவும் முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran condemns the ratio of one physical education teacher for 700 students in government schools