'என் இலக்கு தேர்தல் அல்ல, மக்கள் தான்'...! - 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை அதிரடி முழக்கம்...!
My goal not elections people Annamalai slogan regarding We The Leaders movement
'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை இன்று சமூக ஊடக தளத்தில் திடீரென நேரலை மூலம் மக்களை சந்தித்தார். அப்போது தனது இயக்கத்தின் நோக்கம், எதிர்காலப் பயணம் மற்றும் அரசியல் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.அவர் பேசியதாவது," 'வீ த லீடர்ஸ்' இயக்கம் அரவக்குறிச்சியில் விதைக்கப்பட்ட மக்கள் இயக்க விதையாகும்.
இது அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல; மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்ட இயக்கமாகும்.சமூக மாற்றத்தை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. உண்மையான மாற்றம் மேல்மட்டத்தில் அல்ல, அடித்தளத்தில் இருந்து உருவாக வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும்.கரூரில் இருந்து மக்கள் பணிகளை தொடங்கியுள்ளோம்.

மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்.மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள இந்த அமைப்பு, காலப்போக்கில் வலுவான அரசியல் சக்தியாக வளர்ச்சியடையும் பாதையில் பயணித்து வருகிறது.
எனது இயக்கத்தில் இணையுமாறு யாரிடமும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படவில்லை. குறிப்பாக எந்த அரசியல் கட்சியினரிடமும் என்னுடன் வருமாறு நான் வேண்டுகோள் விடுக்கவில்லை.தற்போது வரை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் இணைந்துள்ளனர். எனது அழைப்பை ஏற்று இந்த மக்கள் பயணத்தில் இணைந்த சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதாரண மக்களாக வந்து இணையும் ஒவ்வொருவரையும் திறந்த மனதுடன் வரவேற்கிறேன். ஓ.டி.பி. உறுதிப்படுத்தல் முறையில் உறுப்பினர்களை பதிவு செய்யும் தனித்துவமான இயக்கமாக 'வீ த லீடர்ஸ்' திகழ்கிறது.இந்த இயக்கத்தை நேர்மையான பாதையிலும், மக்கள் நம்பிக்கையை வெல்லும் வழியிலும் முன்னெடுத்து செல்வேன்.
வரும் ஜூலை மாதம் முதல் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட உள்ளன.இளைஞர்கள் தங்களின் விருப்பத்தாலும், சமூக அக்கறையாலும் தாமாக முன்வந்து இந்த இயக்கத்தில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் இணைந்த ஆயிரக்கணக்கானோர் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், லட்சக்கணக்கான உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதை விட மக்கள் சேவையில் கவனம் செலுத்த விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து, விழிப்புணர்வு மற்றும் மக்கள் எழுச்சி இயக்கங்களை முன்னெடுக்க உள்ளோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
English Summary
My goal not elections people Annamalai slogan regarding We The Leaders movement