“மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!”.. தவெக அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் குரல்!
Must ensure the safety of people lives and property Communist voice raised against the TVK government
சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன், அடையாறு வண்ணாந்துறை பகுதியில் ஓட ஓட விரட்டப்பட்டு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் பதிலளிக்க உள்ள நிலையில், சென்னையின் முக்கியப் பகுதியில் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டம்–ஒழுங்கு குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தவெக அரசு ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் சட்டம்–ஒழுங்கு செயல்பாடுகளை விமர்சித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அடையாறு வண்ணாந்துறையில் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இது மனதைப் பதைபதைக்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதங்களுடன் கும்பல்கள் சுதந்திரமாகச் செயல்படுவது காவல்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம்–ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
“காவல்துறை குற்றம் நடந்த பின்னர் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது” என மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சட்டம்–ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக விளக்கங்களை மட்டும் அளிப்பதைத் தாண்டி, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அவற்றை போக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, போதைப் பொருள் மற்றும் மதுக் கலாசாரத்திற்கு தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போதை மற்றும் மதுக் கலாசாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை மாநிலம் தழுவிய அளவில் தமிழக அரசே நடத்த வேண்டும் என்றும் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டம்–ஒழுங்கு குறித்த அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதல்வர் அளிக்க உள்ள பதிலில் இந்த விவகாரம் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Must ensure the safety of people lives and property Communist voice raised against the TVK government