“அமைதியாக தெரிந்தாலும் நரித்தனமாக செயல்படுகிறார்!” – முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்
He may appear calm but he acts cunningly TTV Dhinakaran harshly criticizes Chief Minister Vijay
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். “பார்க்க அமைதியாக இருந்துகொண்டு மிகவும் நரித்தனமாகவும், விஷமத்தனமாகவும் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தவெக ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
“தவெக ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. சினிமா துறையிலிருந்து வந்தவர்கள் என்பதற்காக நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளனர். அமமுக எம்எல்ஏவையும் அதேபோல் செய்துள்ளனர்” என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தந்திரமாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மாதிரியும் இருக்க வேண்டும், நிறைவேற்றாத மாதிரியும் இருக்க வேண்டும் என்ற வகையில் ஆட்சி செயல்பட்டு வருகிறது. காவிரி நீரைத் திறக்கச் சென்றவர் எம்ஜிஆர் போன்று செய்துள்ளார். அப்படி செய்தால் மட்டும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என விமர்சித்தார்.
மேலும், உசிலம்பட்டி மக்கள் குறித்து சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் கருத்துகளையும் டிடிவி தினகரன் விமர்சித்தார். “உசிலம்பட்டி மக்கள் சட்டை போடக்கூட வழியில்லை என்று கூறுவது அறிவின்மை. காமராஜர் பல்கலைக்கழகத்தை கல்லூரியாக மாற்றச் சொல்கிறார்கள். அண்ணா காலத்தில் இளைஞர்கள்தான் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். இங்கு யாருக்காவது அடிப்படைப் புரிதல் இருக்கிறதா என்றே தெரியவில்லை” என்றார்.தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
“முதல்வருக்கு எழுதி வைத்ததைக்கூட சரியாகப் பேசத் தெரியவில்லை. சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசுவது, திமுக, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் போன்ற அனுபவசாலிகளின் கருத்துகளை உதாசீனப்படுத்துவது போன்று உள்ளது. மாற்றம் வேண்டும் எனக் கூறி யாரைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தவெக அமைச்சர்களுக்கு பார்த்துப் படிக்கக்கூடத் தெரியவில்லை” என அவர் தெரிவித்தார்.
மேலும், வேட்பாளர்கள் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் மக்கள் வாக்களித்துவிட்டதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்தார். “தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்றே தெரியாமல், புரிதல் இல்லாமல் மக்கள் வாக்களித்துவிட்டனர். பிளாக் டிக்கெட் விற்று வந்தவர்கள் தானே... அதனால்தான் சட்டமன்றத்தில் காட்டுக் கத்துக் கத்தி வருகிறார்கள்” எனக் கூறினார்.தவெக அரசு பெரும்பான்மை இல்லாமல் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
“ஆட்சிக்கு வருவதற்கு பெரும்பான்மையே இல்லை. தில்லுமுல்லு செய்து, மற்ற கட்சிகளில் இருப்பவர்களிடம் பதவி தருவதாக பேரம் பேசி ஆட்சிக்கு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஹிட்லர் ஆட்சிதான் நடக்கிறது” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து முதல்வர் விஜய்யை குறிப்பிட்டு பேசிய அவர், “விஜய் அமைதியாகத் தெரிகிறாரே தவிர, மிகவும் நரித்தனமாக, தந்திரமாக, விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சு சினிமா வசனமாகத்தான் இருக்கும்” என்றார்.
விஜய் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் குறித்தும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.அவர் ஆட்சிக்கு வருவோம் என நினைத்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கவில்லை. ஆகவே, அதனை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியையும் விஜய் எடுப்பதாக தெரியவில்லை. முதலில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்த புரிதல் அவருக்கு இருக்குமா என்றே தெரியவில்லை” என தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் இருந்து விஜய் வெளியேறிய விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். “சட்டமன்றத்தில் இருந்து அவர்தான் வெளியே எழுந்து சென்றார். மூன்று நாட்கள் கழித்து சினிமா இயக்குநர் மாதிரி ஒரு அறிக்கையை படிக்கப் போகிறார்” என டிடிவி தினகரன் கூறினார்.
இதனிடையே, தான் அதிமுகவின் இணை பொதுச்செயலாளராகப் போவதாக வெளியான தகவல்கள் குறித்தும் டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.
“நான் அதிமுக இணை பொதுச்செயலாளர் என்பது வதந்திதான். அந்தப் பேச்சே இப்போதைக்கு இல்லை” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.மேகமலை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
“முந்தைய அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறுவது தவறு. தற்போதைய அரசு இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்து, உரியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் உங்களை அமைச்சர்களாக மக்கள் தேர்வு செய்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
He may appear calm but he acts cunningly TTV Dhinakaran harshly criticizes Chief Minister Vijay