“20 ரன்களுக்கு 5 விக்கெட்!” – இங்கிலாந்தில் மிரட்டிய சாய் கிஷோர்.. கில், இந்திய தேர்வாளர்களுக்கு கொடுத்த தரமான பதிலடி!
5 wickets for 20 runs Sai Kishore wreaks havoc in England A fitting reply from Gill to the Indian selectors
இந்திய கிரிக்கெட்டில் திறமை இருந்தும் போதிய வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரும் ஒருவர். ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தாலும், பல போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து மண்ணில் தனது சுழற்பந்து வீச்சால் சாய் கிஷோர் அசத்தியுள்ளார். கவுன்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர், வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் க்ளௌசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வரும் சாய் கிஷோர், டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
319 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி டெர்பிஷைர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஆனால், சாய் கிஷோரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சாய் கிஷோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி, டெர்பிஷைர் அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். இறுதியில் வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாய் கிஷோரின் அபார பந்துவீச்சால் டெர்பிஷைர் அணி வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் க்ளௌசெஸ்டர்ஷைர் அணி 213 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மொத்தமாக 79 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்த செயல்பாடு, இந்திய அணியின் தேர்வாளர்களுக்கும் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் சாய் கிஷோர் கொடுத்துள்ள முக்கியமான பதிலாகவே பார்க்கப்படுகிறது.
சாய் கிஷோரின் திறமை புதிதல்ல. 2023-24 ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய அவர், 53 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தனது திறனை அவர் ஏற்கனவே நிரூபித்திருந்தார்.
ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். இதுவரை 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் கிஷோர் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இத்தனை சிறப்பான புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், உள்ளூர் கிரிக்கெட் மற்றும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தனது இடத்தை மீண்டும் நிரூபித்து வருகிறார்.
சாய் கிஷோரைப் போலவே தற்போது பல இந்திய வீரர்களும் இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். யுஸ்வேந்திர சாஹல், மானவ் சுதர், குல்தீப் யாதவ், அகிப் நபி, ராகுல் சாஹர், ஜெய்தேவ் உனத்கட், மயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்களும் தங்களது அணிகளுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நார்த்தாம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாடும் யுஸ்வேந்திர சாஹல், ஒரு போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார்.
அதேபோல், டர்ஹாம் அணிக்காக விளையாடும் கர்நாடக வீரர் மயங்க் அகர்வால், ஒரு போட்டியில் 36 மற்றும் 48 ரன்கள் எடுத்து தனது அணியின் 153 ரன்கள் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டிலும், கவுன்ட்டி போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்தி வரும் சாய் கிஷோருக்கு, இந்த சிறப்பான செயல்பாடு இந்திய அணிக்கான கதவை மீண்டும் திறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தை கருத்தில் கொண்டு, தேர்வாளர்களின் கவனம் சாய் கிஷோர் பக்கம் திரும்பும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
English Summary
5 wickets for 20 runs Sai Kishore wreaks havoc in England A fitting reply from Gill to the Indian selectors