உ.பி.யில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த மசூதி இடிப்பு: அதிகாலை நடவடிக்கைக்கு ஓவைசி, அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி, அங்கிருந்த மசூதியை மாவட்ட நிர்வாகம் நேற்று அதிகாலை 5 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஆட்சியர் அலுவலகத்தின் 5 பிரதான நுழைவு வாயில்களையும் பூட்டி, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகள் இடிப்புப் பணியை நிறைவு செய்தனர். அரசு நில ஆக்கிரமிப்பில் இருந்ததாலேயே இக்கட்டடம் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசூதி அரசு நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 2025-ஆம் ஆண்டில் பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் விகாஸ் தியாகி மனுத் தாக்கல் செய்திருந்தார். விசாரணையின் முடிவில், ஜூலை 16 அன்று அந்த மசூதி ஆக்கிரமிப்புக் கட்டிடம் என உறுதிசெய்து, அதை இடிக்கச் சகாரன்பூர் நகர மெஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மாவட்ட நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 2 அன்று தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மசூதி கமிட்டி உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை பெறுவதைத் தடுப்பதற்காகவே யோகி ஆதித்யநாத் அரசு அதிகாலையில் அவசர அவசரமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டியுள்ளன. ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி சாடுகையில், "பாஜக அரசுக்கு 'மசூதி' என்ற வார்த்தை மீதே வெறுப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தடுக்கவே அதிகாலையில் இடித்துள்ளனர்; மசூதி கமிட்டிக்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்" எனத் தெரிவித்தார். இதேபோல சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுக ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? அரசின் உத்தரவுக்கு ஏற்ப அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீதியைத் தடுத்துள்ளனர். பிற மதங்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் சனாதனிகளாக இருக்க முடியாது" என விமர்சித்துள்ளார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் அமைதி காக்கக் கோரிக்கை விடுத்துள்ள சகாரன்பூர் சரக டி.ஐ.ஜி அபிஷேக் சிங், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் வைக்கக் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mosque Demolished at Saharanpur DM Office Campus in UP Oppn Slams Yogi Govt Over Early Morning Action


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->