நாட்டின் பிம்பத்தை டிரம்ப் சிதைக்க முயற்சிக்கிறார் என்பதை மோடி கூறியிருக்க வேண்டும் தானே! - ராகுல் காந்தி
Modi should have said that Trump is trying to tarnish countrys image Rahul Gandhi
கடந்த மே 10-ந்தேதி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.இதைத்தொடர்ந்து இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதை உறுதி செய்தன.
இதனிடையே,டொனால்டு டிரம்ப், தனது முயற்சியால்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக பலமுறை தெரிவித்தனர்.ஆனாலும், இருநாட்டு ராணுவ தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

மேலும் கடந்த மாதம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் டொனால்டு டிரம்ப்பை தொடர்பு கொண்டு சுமார் 35 நிமிடங்கள் உரையாடினார். இந்த உரையாடலின்போது, இந்தியா மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் வேண்டுகோளின்படியே தொடங்கப்பட்டதாகவும் மோடி உறுதியாக தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், டொனால்டு டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அதே கருத்தையே தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.இந்த நிலையில், மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது, "டிரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடியால் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரதமர் அவ்வாறு சொன்னால், டிரம்ப் உண்மையை வெளிப்படுத்தி விடுவார். அதனால்தான் பிரதமர் மோடியால் எதுவும் சொல்ல முடியவில்லை.வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவே டிரம்ப் இந்த கருத்துகளை தெரிவித்தார். இனி என்ன மாதிரியான வர்த்தக ஒப்பந்தம் நடக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்று தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "எந்த நாட்டின் தலைவரும் இந்தியாவிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொல்லவில்லை.
உலக நாடுகளிடம் இருந்து இந்தியாவிற்கு ஆதரவு கிடைத்தபோதும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் நமது வீரர்களுக்கு உறுதுணையாக நிற்க முடியவில்லை" என்றார்.தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் பொய் சொல்கிறார் என்று நரேந்திர மோடி தெளிவாக தெரிவிக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததாக டிரம்ப் 29 முறை தெரிவித்துள்ளார்.
ஆனால் நரேந்திர மோடி அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.இது தொடர்பாக பிரியங்கா காந்தி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியும் பயன்படுத்தும் வார்த்தைகளை நீங்கள் கவனமாக கேட்டால், அவை தெளிவற்றதாக இருக்கும்.
அவர்கள் அதை நேரடியாகச் சொல்ல வேண்டும். அமெரிக்க அதிபர் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மோடி தனது 2 மணி நேர உரையில் ஒரு முறை கூட டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடவில்லை. டிரம்பின் கருத்துக்களை அவர் கண்டித்திருக்க வேண்டும். நாட்டின் பிம்பத்தை டிரம்ப் சிதைக்க முயற்சிக்கிறார் என்பதை மோடி கூறியிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
Modi should have said that Trump is trying to tarnish countrys image Rahul Gandhi