ED-க்கும் அஞ்சமாட்டோம், MODI-க்கும் அஞ்சமாட்டோம் - திமுக ஆர்.எஸ் பாரதி கண்டனம்! - Seithipunal
Seithipunal


 
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. தனது ஏஜெண்டான ஆளுநருக்கு அறிவுரை சொல்லி அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது.

EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! சட்டபடி எதிர்கொள்வோம்!
’வாக்கு திருட்டு’ என்ற ’சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

2006-2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி அவர்கள் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கில் 2022-ல் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்குகளில் அதுகாலம் வரையில் தலையிடாத அமலாக்கத் துறை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பது அரசியல் அறியாத எட்டாம வகுப்பு மாணவனுக்கும் கூட தெரியும். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஐ.பெரியசாமி ஒத்துழைத்த பிறகும் கூட இன்றைக்கு திடீரென சோதனை நடத்தியிருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.

விடுதலை பெற்ற வரலாற்றையும் விடுதலை வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூற வேண்டிய சுதந்திர தின வாழ்த்து செய்தியில், அரசியல் அவதூறுகளை அள்ளி வீசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை அரசியல்வாதி போல குற்றச்சாட்டுகளால் வசை மாறி பொழிந்தார். இதையெல்லாம் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவித்தோம். இந்த நிலையில்தான் இன்றைக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

பாஜக வாசிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்; பொய் வழக்கு போடப்பட்டவர்கள். அதனை நீதிமன்றத்தின் நிரூபித்து காட்டி, வெளியே வருவோமே தவிர, பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. சுயமரியாதை பாதையில் வந்தவர்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள். அவசரகால நெருக்கடிகளை போல எத்தனையோ தழும்புகளுக்கு சொந்தக்காரர்கள்.

’சட்டவிரோத பண பரிமாற்றம்’ என சொல்லி அமலாகத்துறை செய்யும் அடாவடிகள் ஒவ்வொன்றும் நீதிமன்றத்தில் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றன.

* ’’கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் சொன்னார்.

* மூடா ஊழல் வழக்கில், “அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.

* சத்தீஸ்கர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், "ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை, தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்குகளில் இதை நாங்கள் பார்க்கிறோம்" என உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சனம் வைத்தது.

அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தன்னுடைய தேர்தல் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது மோடி அரசு. ’சட்டவிரோத பண பரிமாற்றம்’ என பேசும் ஒன்றிய அரசுதான் ’வாக்கு திருட்டு’ அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, பாஜக வாக்கு மோசடி செய்திருப்பது இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது. இதனைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது.

சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் அவரிடம் நிலுவையில் இருக்கிறது. தனது ஏஜெண்டான ஆளுநருக்கு அறிவுரை சொல்லி அதற்கு அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது FIR போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் சிலர் மீது தாக்கலாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் பக்கம் ED  தலை வைத்தும் படுக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது திமுக அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாகுவது மட்டுமே ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அதனை வைத்து பாஜக தலைவர்களும் பாஜகவின் அடிமைகளும் தங்களது மனம்போன போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. இந்த துருப்பிடித்த ஆயுதங்களை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டே வருகிறது. இந்த அவதூறுகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை. அது தெரிந்தும் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; EDக்கும் அஞ்சமாட்டார்கள். திமுகவின் தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண். அதனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். இதனைக் கண்டு மென்மேலும் எரிச்சலுற்று இதுபோன்ற ED சோதனைகளை நடத்தி அச்சுறுத்த கனவு காண்கின்றனர். அது தமிழ்நாட்டில் எடுபடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister I Periyasamy ED Raid BJP DMK Mk Stalin RS Bharati


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->