தமிழக காங்கிரசில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை - குமுறும் மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத்!
TN congress woman issue
தமிழக அரசியல் சூழலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நீடிக்கும்போது, தமிழக காங்கிரஸுக்குள் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
“தமிழ்நாடு காங்கிரஸில் மகளிருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை” என்ற கூற்றுடன், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் கட்சிக்குள் அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரபல நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ஹசீனா சையத் கூறியதாவது: “காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதே உண்மை. இதைச் சரி செய்யும் நோக்கில் இந்திரா காந்தி தனியாக மகளிர் காங்கிரஸை உருவாக்கினார். ஆனால் நடைமுறையில் அந்த நோக்கம் பின்பற்றப்படவில்லை. குஷ்பு, விஜயதரணி போன்றோர் பதவி சுகத்தை அனுபவித்து கட்சியை விட்டு சென்றவர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிட முடியாது. நான் இன்று வரை ஒரு வார்டு கவுன்சிலர் பதவியையே பெறவில்லை.”
அவர் மேலும் தெரிவிக்கையில்: “எனது நோக்கம் அதிகாரமோ பணமோ அல்ல. சம்பாதிக்க வேண்டும் என்று இருந்தால் திராவிட கட்சிகளில் சேர்ந்திருப்பேன். ஆனால் நாங்கள் கட்சித் தத்துவத்திற்காகவே காங்கிரஸில் இருக்கிறோம். ஆனாலும், கட்சிக்குள் மகளிருக்கு உரிய மரியாதையும் வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.”