'விஜய்யை நம்பி வந்தவர்கள் யாரும் கெட்டதாக வரலாறு இல்லை'; வரும் 10-ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் விஜயம்; அமைச்சர் ஆனந்த்..! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் விழா இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ஆனந்த் பேசுகையில் குறிப்பிட்டதாவது;
''நீங்கள் இணைந்தது மிகவும் மகிழச்சி. உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நீங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கட்சித் தலைவர் விஜய்யின் தோழர்கள். இனி வரும் காலங்களில் உங்கள் அனைவரையும் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்களது கடமை. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், தவெக உங்களுடன் இருக்கும்'' என்று அவர்களை வரவேற்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், விஜய்யை நம்பி வந்தவர்கள் யாரும் கெட்டதாக வரலாறு இல்லை, வாழ்ந்ததாகத்தான் வரலாறு என்று கூறியதோடு, இன்று நான் ஒரு எம்எல்ஏவாக, அமைச்சராக இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். அத்துடன் தனது  தி நகர் தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, நான் நான்கு நாள்தான் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ததாகவும், அவர்கள் யாரும் எனக்காக ஓட்டு போடவில்லை. முழுக்க முழுக்க தலைவர் விஜய்க்காகத்தான் வாக்களித்தார்கள் என்று சுட்டிக்காட்டி பேசினார்.

அத்துடன், 233 தொகுதிகளிலும் டெப்பாசிட் இழக்காத ஒரே கட்சி தவெக மட்டும்தான் என்றும், அதிமுகவில் இருந்து இங்கு வந்துள்ளவர்களில் 75% பேர் இளைஞர்களாக இருக்கிறீர்கள் என்றும், நீங்களும் விசில் சின்னத்துக்குத்தான் ஓட்டு போட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

மேலும், இனி, உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டால்கூட அதை பார்த்துக்கொள்ளக்கூடிய கட்சியாக தவெக இருக்கும் என்று தெரிவித்ததோடு, முதல்வர் உங்கள் அனைவரையும் அரவணைத்துக்கொள்வார் என்று தெரிவித்தார். அதேபோன்று, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் அவர்களுக்கு உரிய மரியாதையை தர வேண்டும் விஜய் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி பேசினார்.

அத்துடன், அன்று வாத்தியார், இன்று தளபதி, ஆனால் பாதை ஒன்றுதான் என்றும், அங்கு இருந்துவிட்டு இங்கே வந்துவிட்டோமே என்று நீங்கள் நினைக்க வேண்டாம் என்றும், நாங்கள் உங்களை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம். அதில் சந்தேகப் படவேண்டாம் என்று நம்பிக்கை கொடுத்ததோடு, நாங்கள் உங்களை நம்புவோம். நீங்களும் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், எங்கள் தோழர்கள் 30, 32 ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தலைவர் விஜய்க்காக சேவை செய்து வருகிறார்கள் என்றும், நீங்களும் அவ்வாறு இருப்பீர்கள் என எண்ணுகிறேன். உங்கள் பகுதிக்காக நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம் என்று தெரிவித்தார். அத்துடன், நேற்றுதான் கட்சியில் இணைந்தீர்கள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டோம், எப்போதும் உங்களுடன் உறுதுணையாக இருப்போம் என்று நம்பிக்கை அளித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த்,  நீங்கள் முன்பு இருந்த கட்சியைவிட நாங்கள் உங்களை சிறப்பாக பார்த்துக்கொள்வோம். எங்கள் நிர்வாகிகளோடு நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கட்சியில் இணைந்தவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

எதிர் வரும் 10-ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார் என்று குறிப்பிட்டதோடு, வரக்கூடிய பஞ்சாயத்துத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தவெகவினரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், அதற்கான வாய்ப்பை உங்களுக்கும் தலைவர் விஜய் வழங்குவார் என்று குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தவெகவினர் வெற்றி பெற்றால்தான், மக்களுக்கான சேவைகளை நாம் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்றும், அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அமைச்சர் ஆனந்த பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Anand says that Chief Minister Vijay will visit Karur on the 10th


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->