'அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 06 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது'; தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை எம்பி புகார்..!
Inbadurai MP complains to Election Commission that by elections should not be held in 06 constituencies where AIADMK MLAs have resigned
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 06 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அதிமுக எம்பி இன்பதுரை புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இன்பதுரை, திரை மறைவில் குதிரை பேரங்கள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது;
இன்று தவெகவில் சேர்ந்த விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் கொரடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக, அதிமுக பொதுச்செயலாளரிடம் மன்னிப்புக் கடிதம் அளித்தனர். ஆனாலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளின்படி 15 நாட்களுக்குள் அவர்கள் மன்னிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு நாடகமாடிவிட்டு, மீண்டும் சென்று தவெகவில் இணைந்ததுள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவும் செயல் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி, சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்து விட்டாலோ அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ உருவாகுவதுதான் காலியிடம். ஆனால், தற்போது 06 தொகுதிகளில் ஏற்பட்டிருப்பது சர்ச்சைக்குரிய காலியிடம். எனவே, வரும் 06 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியை மட்டும் காரணம் காட்டித் தேர்தல் நடத்தினால், அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அர்த்தமற்றதாக்கிவிடும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்டை மாநிலமான தெலுங்கானாவில், வழக்கு நிலுவையில் இருந்த காரணித்தினால் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் முடிவை இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்ததாகவும், உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி தனது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், லட்சத்தீவு எம்பி முகமது பைசல் மற்றும் பி.சி. ஜார்ஜ் ஆகியோரின் வழக்குகளில், ஒருவரின் பதவியிழப்பு தொடர்பான விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அந்த இடத்திற்கு அவசர அவசரமாகத் தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சட்டம் தெளிவாக வரையறுக்கப்படாத சூழ்நிலைகளில், இத்தகைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே தேர்தல் ஆணையத்திற்குச் சரியான வழிகாட்டியாக அமையும் எனவும் அதிமுக எம்பி இன்பதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், எம்எல்ஏக்கள் சுய விருப்பத்தின் பேரில் வேறு கட்சிக்குச் செல்வது குதிரைப் பேரம் அல்ல, அது குதிரை ரேசிங் என காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், திமுக எதிர்க் கட்சியில் அமர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் எனவும் கூறியுள்ளார்.
இந்த சூழலில், தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 07 காலிதொகுதிகள் இருக்கும் நிலையில், பீகாரின் பங்கிபூர், மத்திய பிரதேசத்தின் தாட்டியா, குஜராத்தின் மஞ்சள்பூர் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 30-ஆம் திகதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Inbadurai MP complains to Election Commission that by elections should not be held in 06 constituencies where AIADMK MLAs have resigned