மேகதாது அணை விவகாரம்...! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ராசிமணல் அணை ஒன்றே தீர்வு...! - வேல்முருகன் முழக்கம் - Seithipunal
Seithipunal


மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்தி, தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ராசிமணலில் அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் விவசாயிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,"காவிரி என்பது வெறும் நதியின் பெயர் மட்டுமல்ல. தமிழகத்தின் விவசாயம், குடிநீர் தேவை, உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் ஆகிய அனைத்துடனும் பின்னிப் பிணைந்த உயிர்நாடியாக விளங்குகிறது.காவிரி நீரை நம்பி வாழும் தமிழக விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பது, தமிழகத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு இணையானதாகும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காவிரி நீர் உரிமையையும் பாதுகாக்கும் வகையில், மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அதேவேளை, தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ராசிமணலில் அணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரப் பயணத்துக்கும் போராட்டத்துக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.மேகதாது அணை தொடர்பான முயற்சிகள் தமிழகத்தின் காவிரி நீர் உரிமை குறித்து தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, ராசிமணலில் அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர்.

காவிரி நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால்தான் டெல்டா உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெற முடியும். விவசாயம் பாதிக்கப்பட்டால், விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் என விவசாயத்தைச் சார்ந்துள்ள பல்வேறு துறைகளும் பாதிக்கப்படும்.

இதனால், காவிரி நீர் பிரச்சினை என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல; தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய முக்கியப் பிரச்சினையாகும்.விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி நீர் தொடர்பான விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கவும், ராசிமணலில் அணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

காவிரி நீர் உரிமையையும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நோக்கில் நடைபெறும் அனைத்து ஜனநாயகப் போராட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதியாக பங்கேற்கும். விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறும் வரை அவர்களுடன் கைகோர்த்து நிற்போம்.இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mekedatu Dam issue Rasimanal Dam only solution establish Tamil Nadu rights Velmurugan slogan


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->