புற்றுநோய் மருந்துகளில் அப்பட்டமான பகல்கொள்ளை...! கொள்முதல் விலையைவிட 10 மடங்கு அதிகம் விலை நிர்ணயித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி...!
Blatant daylight robbery cancer drugs Supreme Court deeply dissatisfied issue pricing 10 times higher than purchase price
அத்தியாவசியமான புற்றுநோய் மருந்து ஒன்றை விற்பனை செய்யும்போது, கொள்முதல் விலையைவிட 10 மடங்கு அதிகமாக அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நோயாளிகளின் துயரத்தை பயன்படுத்தி மருந்துகளுக்கு அளவுக்கு அதிகமாக விலை நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிப்பதைத் தடுக்கவும், மருந்துகளின் விலை கட்டுப்பாட்டை முறையாக உறுதி செய்யவும் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மருந்துகளின் சில்லறை விற்பனையில் அதிகப்படியான லாபம் ஈட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், மூலக்கூறு பெயர்களில் மருந்துகளை பரிந்துரைக்காத மருத்துவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.அப்போது மனுதாரர்களில் ஒருவர், அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், மத்திய அரசும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இருப்பதாகவும், மனுவை எதிர்மறையாக கருதவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது,"அத்தியாவசியமான புற்றுநோய் மருந்து ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.27 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே மருந்து சில்லறை விற்பனையாளருக்கு ரூ.2 ஆயிரத்து 700-க்கே வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலையைவிட 10 மடங்கு அதிகமாக விலை நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயமானது?
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தங்களது வீடுகள், நகைகள் உள்ளிட்ட சொத்துகளையே விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்தகைய சூழலில், மருந்துகளுக்கு இதுபோன்று அளவுக்கு அதிகமான விலை நிர்ணயிப்பது நோயாளிகளிடம் நடத்தப்படும் அப்பட்டமான பகல் கொள்ளை போன்றது.மக்களின் துயரத்தை பயன்படுத்தி இதுபோன்ற விலையை நிர்ணயிப்பது மிகவும் கவலைக்குரியது.
இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனமாக இருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 29-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
English Summary
Blatant daylight robbery cancer drugs Supreme Court deeply dissatisfied issue pricing 10 times higher than purchase price