மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மௌனத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்!
Mekedatu Dam Issue EPS Slams TVK Govt CM Vijay Over Silence Demands All-Party Meeting
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைய உள்ள இடத்தில் மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் ஆய்வு நடத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசிற்கு எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்:
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடகத்துடன் கூட்டு சேர்ந்து, மாநிலத்தின் நதிநீர் உரிமைகளுக்கும் விவசாயிகளுக்கும் வஞ்சகம் இழைக்கும் வகையில் செயல்படுகிறதா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது அணை கட்டுமான அனுமதி கோரி மத்திய ஜல்சக்தி அமைச்சரை கர்நாடகத் தரப்பு சந்தித்துப் பேசியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், கீழ்நிலைப் பாசன மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முன்அனுமதியில்லாமல் காவிரிப் படுகையில் புதிய அணையோ அல்லது நீர்த்தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியலமைப்புச் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
'ரீல்ஸ் முதல்வர்' எனச் சாடல் மற்றும் கோரிக்கைகள்:
காவிரியில் உரியத் தண்ணீரைத் திறக்கக் கோருவதற்கும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பதற்கும் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை எனச் சாடிய எடப்பாடி பழனிசாமி, கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் "ரீல் முதல்வருக்கு" எனது கடுமையான கண்டனங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இனிமேலும் தாமதிக்காமல் முதலமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உரிய அரசியல் மற்றும் சட்டப்பூர்வ அழுத்தங்களைக் கொடுத்து மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Mekedatu Dam Issue EPS Slams TVK Govt CM Vijay Over Silence Demands All-Party Meeting