மலைக் கிராமங்களுக்குத் தேடி வரும் மருத்துவச் சேவை! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘குறிஞ்சி நலம்’...! - குரங்கணியில் முதல் முகாம்...!
Medical services coming hill villages DMK leader MK Stalin launched Kurinji Nalam First camp Kurangani
தமிழ்நாட்டின் மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ‘குறிஞ்சி நலம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையையும் வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் சுமார் 2,000 மலைக் கிராமங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிப்பதாகத் தெரிவித்தார். கரடுமுரடான பாதைகள், போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால், அவர்களுக்குத் தேவையான உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் குறையைப் போக்கும் வகையில், ‘குறிஞ்சி நலம்’ அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மலைக் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 14 சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் மருத்துவப் பரிசோதனைகள், மருந்து வழங்குதல், நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் உயர் சிறப்பு சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.அமைப்பின் முதல் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் குரங்கணி மலைக் கிராமத்தில் நடைபெற உள்ளது.
இதில் ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, நவம்பர் 29-ந் தேதி வால்பாறையில் மற்றொரு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சத்தியமங்கலம், ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களைச் சென்றடைவதே இலக்கு என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
English Summary
Medical services coming hill villages DMK leader MK Stalin launched Kurinji Nalam First camp Kurangani