நிர்வாகத்தைக் கேலிக்கூத்தாக மாற்றாதீர்கள்...! கோவை பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ பெயர் மறைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசைக் கடுமையாக விளாசிய உதயநிதி...!
Dont make administration joke Udhayanidhi strongly criticized Tamil Nadu government hiding name Coimbatore Periyar intellectual world
கோவையில் திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். முந்தைய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டுவதும், திட்டங்களை ரத்து செய்துவிட்டு மீண்டும் அவற்றைச் செயல்படுத்துவதுமாக நிர்வாகம் நடத்தாமல், மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,“திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி செலவில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

அறிவையும் அறிவியல் சிந்தனையையும் வளர்க்கும் இந்த மாபெரும் அறிவுக் களஞ்சியத்தை கோவை வாழ் பொதுமக்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.வழக்கமாக தி.மு.க. அரசின் திட்டங்களுக்குத் தங்களது பெயரை ஒட்டிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், இம்முறை பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பெயரின் மீது வேறொரு ஒட்டுப்பெயரைப் பயன்படுத்தி மறைத்துள்ளனர்.
தற்போதைய முதல்-அமைச்சரின் ஒட்டுப்பெயர் அரசியலில், ‘நான் முதல்வன்’ திட்டம் சிதைக்கப்பட்டதுடன், அதன் பெயரைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏன் ஏற்பட்டுள்ளது?‘முதல்வன்’ என்று சொன்னாலே மு.க.ஸ்டாலின் நினைவுக்கு வருவதாலா? அல்லது மாணவர்கள் தங்களது துறைகளில் முதன்மையானவர்களாக உயர்வதை விரும்பவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், முந்தைய அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது, திட்டங்களை ரத்து செய்வது, பின்னர் ரத்து செய்த முடிவுகளையே திரும்பப் பெறுவது என நிர்வாகத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருப்பதாகவும் உதயநிதி விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற செயல்களால் நிர்வாகத்தை ஒரு கேலிக்கூத்தாக மாற்றாமல், மக்கள் நலனை மையமாகக் கொண்ட ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Dont make administration joke Udhayanidhi strongly criticized Tamil Nadu government hiding name Coimbatore Periyar intellectual world