திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் – எண்ணிக்கை குறைந்ததற்கு இதுதான் காரணமா?பின்னணியில் துரை வைகோ!
MDMK has 4 seats in the DMK alliance is this the reason for the decrease in numbers Durai Vaiko in the background
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மமக ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
காங்கிரஸ் உடனான ஒப்பந்தம் முடிந்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நீடித்து வந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு திமுக மற்றும் மதிமுக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த தேர்தலில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்றும் ஒரு தொகுதியில் மதிமுக சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்களில் 4 பேர் வெற்றி பெற்றனர். இதனால் இந்த முறை ஏன் 6 இடங்களிலிருந்து 4 இடங்களாக குறைக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவதாவது, ஆரம்பத்தில் திமுக தரப்பில் மதிமுகவுக்கு 5 தொகுதிகள் வழங்கும் முன்மொழிவு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த 5 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் பேசினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மதிமுக தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டபோது, துரை வைகோ குறைந்தது ஒரு தொகுதியிலாவது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இறுதியில் ஒரு தொகுதியில் மதிமுக சின்னத்தில் போட்டியிட ஒப்புதல் கிடைத்தாலும், தொகுதி எண்ணிக்கை 5 இலிருந்து 4 ஆக குறைக்கப்பட்டது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம், தேமுதிக போன்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது.
English Summary
MDMK has 4 seats in the DMK alliance is this the reason for the decrease in numbers Durai Vaiko in the background