திமுக கூட்டணியில் மதிமுக ‘16 தொகுதி’ கோரிக்கை: உத்தேச பட்டியலை ரெடி செய்த மதிமுக? போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோவின் மதிமுக இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலை விட அதிக அளவில் போட்டியிடும் நோக்கில், மொத்தம் 16 தொகுதிகளில் களமிறங்க உத்தேச பட்டியலை மதிமுக தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக–பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், கூட்டணி கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை முன்கூட்டியே உறுதி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அதிமுக–பாஜக தரப்பில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் வேகமெடுத்து வரும் நிலையில், திமுக கூட்டணியிலும் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடந்த முறை விட அதிக தொகுதிகளை கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், மதிமுக 16 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்காநல்லூர், பல்லடம் அல்லது கிணத்துக்கடவு ஆகியவற்றில் ஒன்றில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், இத்தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அர்ஜுன் ராஜ் களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல். கடலூர் அல்லது புவனகிரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால், அங்கு கட்சியின் பொருளாளர் செந்தில் அதியமான் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

கடந்த முறை வெற்றி பெற்ற மதுரை தெற்கு தொகுதியை மீண்டும் கேட்க முடிவு செய்துள்ளதாகவும், கடையநல்லூரில் தி.மு. ராஜேந்திரனை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல். நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் நிஜாமுக்காகவும், திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதியில் டாக்டர் ரொக்கையாவிற்காகவும் கோரிக்கை விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியில் முன்னாள் எம்பி சிப்பிபாறை ரவிச்சந்திரனை நிறுத்தவும், கடந்த முறை வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதியையும் மீண்டும் பெறவும் மதிமுக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல். வைகோவின் சொந்த தொகுதியான கோவில்பட்டியில் ஆர். ரமேஷை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முடக்குறிச்சி தொகுதியில் செந்தில் நாதன், தனித்தொகுதியான சீர்காழியில் வேட்பாளர் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த முறை வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் மற்றும் அரியனூர் தொகுதிகளை இந்த முறை கேட்க வேண்டாம் என்ற முடிவும் மதிமுக எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் 16 தொகுதிகளை கோரி மதிமுக பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது. வரும் 21-ஆம் தேதி திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிவுகளின் அடிப்படையில் இறுதி தொகுதி ஒதுக்கீடும், வேட்பாளர் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MDMK demands 16 constituencies in DMK alliance Has MDMK prepared its proposed list What are the constituencies it wants to contest from


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->