மகளிருக்கு சுய வேலைவாய்ப்பு: இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை மேயர் பிரியா திறந்து வைத்தார்..!
Mayor Priya inaugurates free skill development training centre
மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில்,மேயரின் 2025-26-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் படி, இராயபுரம் மண்டலத்தில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தினை, மேயர் ஆர்.பிரியா இன்று திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) எம்.பிரதிவிராஜ், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விசுவநாதன் மண்டலக்குழுத் தலைவர் பிஸ்ரீராமுலு. மாமன்ற உறுப்பினர் நிரஞ்ஜனா ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இலவசமாக வழங்கிட ஏதுவாக, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மையம் அமைத்திட மண்டலம் ஒன்றுக்கு ரூ.50 இலட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை 15 மண்டலங்களிலும் தொடங்கி வைக்கும் விதமாக, இன்று (27.06.2025) (இராயபுரம் மண்டலம், வார்டு-51, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தினைத் மேயர் பிரிய திறந்து வைத்தார். அத்துடன் அங்கு முதற்கட்டமாக தையல் பயிற்சி பெறும் மகளிருக்கு தையல் பயிற்சிக்கான பொருட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பயிற்சி மையங்களில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 115 பெண்கள் 04 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 02 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சி வகுப்புகளில் துணிகளை சரியான முறையில் வெட்டுதல், தைத்தல், ஆரி மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு மையத்திற்கும் 40 தையல் இயந்திரங்கள் வரை வழங்கப்பட்டுள்ளது.
இங்கு அனுபவமிக்க 05 பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்படுகிறதோடு, இதன் அடுத்தக்கட்டமாக இம்மையங்களில் கணினிப் பயிற்சியும், அழகுக்கலைப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Mayor Priya inaugurates free skill development training centre