பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைக்கு அரசு ஊழியர்களிடம் ஆலோசனை தேவையில்லை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!
Supreme Court rules that consultation with government employees is not required for biometric attendance system
அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து ஊழியர்களிடம் முன் ஆலோசனை நடத்த வேண்டிய தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசாவில் உள்ள முதன்மை கணக்காயர் அலுவலகத்தில், ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை கடந்த 2013-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது.
இதை எதிர்த்து ஊழியர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். குறித்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஊழியர்கள் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஊழியர்களிடம் முன் ஆலோசனை நடத்தாத காரணத்தால், கடந்த 2014-ஆம் ஆண்டு பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதனபடி, உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
குறித்த வழக்கை நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை ஊழியர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியது என்பதை ஊழியர்கள் தரப்பிலேயே ஒப்புக்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து நீதிபதிகள், 'இந்த வழக்கின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்துவது அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என்றும், அதைச் செயல்படுத்துவதற்கு முன்பு ஊழியர்களிடம் ஆலோசிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அந்த முறையை சட்டவிரோதமானது என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஊழியர்களே இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத பட்சத்தில், இந்த விவகாரத்தில் இனி எந்த சர்ச்சையும் இல்லை என்று கூறி, ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளனர். மேலும், முதன்மை கணக்காயர் அலுவலகத்தில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை செயல்படுத்தலாம் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court rules that consultation with government employees is not required for biometric attendance system