'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' தீவிரம்!தாய்மாமன் திட்ட டெண்டர் ரகசியம் இதுதான்! குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி!
Maternal Uncle Gold Ring Scheme gathers momentum Here is the secret behind the scheme tender Putting an end to the confusion
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை" செயல்படுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் ஒரு கிராம் எடையுள்ள 22 கேரட் (916 ஹால்மார்க்) தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் (TNMSC) அதிகாரப்பூர்வ டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெண்டர் வெளியானதைத் தொடர்ந்து, திட்டம் குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.13 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், அரசு இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்ற விவாதம் அதிகரித்தது. சிலர் 8 கேரட் அல்லது 14 கேரட் தங்கம் பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பினர்.
ஆனால், தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் வெளியிட்டுள்ள டெண்டர் ஆவணத்தில் இதற்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து மோதிரங்களும் 22 கேரட் (916) ஹால்மார்க் தரத்திலேயே இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மோதிரத்திற்கும் BIS ஹால்மார்க் சான்றிதழ் மற்றும் தனித்துவமான HUID குறியீடு கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் டெண்டர் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது என அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அரசு வெளியிட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின்படி, ஆண்டுதோறும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க ரூ.755.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குழந்தைக்கான மொத்த செலவு சுமார் ரூ.17 ஆயிரம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தங்கத்தின் விலை மட்டுமின்றி, செய்கூலி, பாதுகாப்பு பேக்கேஜிங், HUID பதிவு, மாவட்ட மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும். மேலும், நிர்வாகச் செலவுகளுக்காக தனியாக ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறுபடுவதால், எதிர்கால விலை உயர்வையும் கருத்தில் கொண்டு அரசு கூடுதல் நிதியை முன்கூட்டியே ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணம் வழங்கும்போது, ஆர்டர் வழங்கப்படும் நாளின் அதிகாரப்பூர்வ தங்க விலையை அடிப்படையாகக் கொண்டு தொகை நிர்ணயிக்கப்படும் என்றும் டெண்டர் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான டெண்டர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2026 ஆகஸ்ட் 17 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ.750 கோடி மதிப்பிலான விற்பனையை மேற்கொண்ட பெரிய நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால், தரம் மற்றும் விநியோகத் திறன் உறுதி செய்யப்படும் என அரசு நம்புகிறது.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்" அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவிருப்பது, தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
English Summary
Maternal Uncle Gold Ring Scheme gathers momentum Here is the secret behind the scheme tender Putting an end to the confusion