திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு திட்டம்!இனி பவர் செண்டர் கிடையாது.. பதவிக்கு காலக்கெடு கொண்டு வரும் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் எடுத்த முடிவு!
Major restructuring plan within the DMK No more power centers Stalin to introduce tenure limits for posts decision taken at Arivalayam
2026 சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கட்சியின் அமைப்பை அடுத்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றும் வகையில், மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு வயது வரம்பு மற்றும் பதவிக்காலக் கட்டுப்பாடுகளை கொண்டு வர திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை முழுமையாக மறுசீரமைக்கப் போவதாக முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து தொகுதி வாரியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் திமுக தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கட்சித் தலைமைக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுகவில் தற்போது 78 ஆக உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100-க்கும் அதிகமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒரு மாவட்டச் செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, நிர்வாகப் பணிகளைப் பரவலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, மாவட்டச் செயலாளர்கள் நீண்ட காலம் ஒரே பகுதியில் அதிகார மையமாக செயல்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் வயது வரம்பு மற்றும் பதவிக்காலக் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அதன்படி, நகரச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 60 ஆகவும், மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆகவும் நிர்ணயிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேபோல், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரே பதவியில் தொடர்ந்து இருப்பதைத் தடுக்கும் வகையில் பதவிக்கால வரம்பும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட அதிகார மையங்களாக உருவாகும் நிலையை கட்டுப்படுத்துவதுதான் என கூறப்படுகிறது. ஒரே நபர் நீண்ட காலம் மாவட்ட அமைப்பை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, புதிய தலைமுறையினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே திமுக தலைமையின் எண்ணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளை வழங்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் புதிய தலைமுறையை உருவாக்குவதோடு, நீண்ட காலமாக பதவியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளின் ஆதிக்கத்தையும் படிப்படியாக குறைக்க முடியும் என திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது.
மேலும், மண்டலச் செயலாளர் என்ற அமைப்பு முறையை முழுமையாக நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்தவும், இளம் தலைமுறையினரை அதிக அளவில் கட்சிப் பொறுப்புகளுக்கு கொண்டு வரவும் இந்த மாற்றங்கள் உதவும் என திமுக தலைமை நம்புவதாக தெரிகிறது.
இதனால், தலைமைச் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு திமுகவில் மாவட்ட அளவில் தொடங்கி மாநில அளவு வரை பல்வேறு முக்கிய மாற்றங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அறிவாலய வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
English Summary
Major restructuring plan within the DMK No more power centers Stalin to introduce tenure limits for posts decision taken at Arivalayam