வேளச்சேரியில் அரிவாள் அட்டகாசம்: போதை கும்பல் தாக்குதல்... சட்டம்-ஒழுங்கு எங்கே...?- அரசை சாடிய டிடிவி தினகரன்
Machete rampage Velachery Attack bydrug gang Where law and order TTV Dhinakaran criticizes government
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் தமிழக அரசையும் காவல்துறையையும் கடுமையாக சாடியுள்ளார். சென்னை வேளச்சேரி அருகே போதையில் அலைந்த ஒரு கும்பல், அப்பகுதியில் உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கும் கொடூர காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் போதைக் கும்பல்களை கண்காணிக்கவும், இதற்கு அடிப்படை காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் எந்தவிதமான திடமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால்தான் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன என்றும் தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கை பேணிக் காக்க வேண்டிய காவல்துறை, இவ்வாறான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியும் தன்னிடம் எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோல் அலட்சியமாக நடந்து கொள்வதால், பொதுமக்கள் பொதுவெளிகளில் சுதந்திரமாக நடமாட முடியாத அச்சநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் போதைக் கும்பல்களை உடனடியாக கைது செய்து அவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் தலைநகரிலிருந்து கடைக்கோடி கிராமங்கள் வரை தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை அடியோடு ஒழிக்க தேவையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையையும், தமிழக அரசையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Machete rampage Velachery Attack bydrug gang Where law and order TTV Dhinakaran criticizes government