தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு நெருக்கடி! உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? யார் கைக்கு செல்லும் போலீஸ் கண்ட்ரோல்?
Law and order crisis in Tamil Nadu Will Chief Minister Vijay relinquish the Home portfolio Into whose hands will police control pass
சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்து வரும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்துறை பொறுப்பை தனி அமைச்சரிடம் ஒப்படைக்க ஆலோசித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த சில குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தை மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாக்கியுள்ளன. டி.நகரில் நடைபெற்ற நகைக் கொள்ளை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தற்போது முதலமைச்சர் விஜய் தனது வசம் உள்துறை மற்றும் காவல்துறை பொறுப்புகளை வைத்திருக்கும் நிலையில், நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டிய சூழல் காரணமாக, உள்துறைக்கு முழுநேர கவனம் செலுத்துவது சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சட்டம்-ஒழுங்கை முழுமையாக கண்காணிக்கக்கூடிய தனி அமைச்சரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பொறுப்புக்கான முக்கிய பெயராக, தற்போதைய பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா பெயர் பேசப்படுகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள அவர், கட்சியின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பிலும் முக்கிய பங்காற்றியவர் எனக் கருதப்படுகிறார்.
கட்சியின் உயர்மட்ட வட்டாரங்களின் கருத்துப்படி, நிர்வாகத் திறன் மற்றும் ஒருங்கிணைப்பு அனுபவம் கொண்ட ஆதவ் அர்ஜுனாவிடம் உள்துறை பொறுப்பை ஒப்படைத்தால், காவல்துறை நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்ற மதிப்பீடு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் தற்போது உள்ள பிற துறைகளை மாற்றி, உள்துறையை மட்டும் தனி பொறுப்பாக வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், முதல்வர் விஜய் உள்துறை பொறுப்பை கைவிடுகிறார் அல்லது ஆதவ் அர்ஜுனாவுக்கு உள்துறை வழங்கப்பட உள்ளது என்ற தகவல்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இவை அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடர்ந்து அரசியல் விவாதமாக மாறி வரும் நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்த ஏதேனும் முடிவு எடுக்கப்படுமா என்பது குறித்து வரும் நாட்களில் தெளிவு கிடைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
Law and order crisis in Tamil Nadu Will Chief Minister Vijay relinquish the Home portfolio Into whose hands will police control pass