கரூர் சம்பவம்: இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய்!
Karur Stampede TVK Vijay
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில், விஜய் அறிவித்தபடி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே ரூ.20 லட்சம் நிவாரணம் அவரவர் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் நேரில் சந்திப்பதாக உறுதியளித்திருந்தார். அதன்படி கரூரில் நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் திருமண மண்டப உரிமையாளர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் இடம் மாற்றப்பட்டது. பின்னர் திருச்சியில் நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டும், அங்கும் அனுமதி சிக்கல் ஏற்பட்டது. இதனால் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்தார்.
அதன்படி, இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரம் ‘ஃபோர் பாயிண்ட்ஸ்’ ஓட்டலில் விஜய், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்திக்கிறார். இவர்களில் 31 பேர் கரூரிலிருந்தும், மற்றவர்கள் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர்.
காயமடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜயைச் சந்திக்க உள்ளனர். இதுவரை வழங்கப்படாத ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் இன்று நேரடியாக வழங்கவுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வருதல், தங்குமிடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் த.வெ.க. நிர்வாகம் செய்துள்ளது. நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் குடும்பங்களை ஒன்று சேர்த்து, 5 சொகுசு பேருந்துகளில் மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்தனர். இன்று விஜய் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.