கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ஆஜர்!
Karur Stampede TVK Vijay CBI Case
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்று (நவ. 13) கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகினர்.
சிபிஐ விசாரணை நிலவரம்:
இந்த வழக்கில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, அக்டோபர் 30-ஆம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ, 3டி லேசர் ஸ்கேனர் மூலம் விபத்து நடந்த சாலையை அளவீடு செய்தது.
அக். 31 முதல் வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், நவ. 4 முதல் 11 வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்குச் சம்மன் அனுப்பப்பட்டு, பிரச்சார வாகனத்தின் சிசிடிவி பதிவுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறித்த ஆவணங்கள் பெறப்பட்டன.
மின்வாரிய அதிகாரிகள் விசாரணை:
இந்நிலையில், இன்று மதியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கரூர் மேற்கு நகரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் பி.ஓ. கண்ணப்பன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.
இவர்களிடம், செப்டம்பர் 27 அன்று தவெக கூட்டத்திற்கான மின் விநியோகம், மின் துண்டிப்பு ஏற்பட்டது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
English Summary
Karur Stampede TVK Vijay CBI Case