‘கல்கி 2’ படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனுக்கு ஒரு நாளைக்கு 15 கோடி சம்பளமா? காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்
Did Kamal Haasan get a salary of 15 crores per day to play the villain in Kalki 2 Kamal Haasan who played the villainous villain
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ‘கல்கி 2’ முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரபாஸ் நாயகனாக நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முதல் பாகத்தில் கமல்ஹாசன் நடித்த ‘சுப்ரீம் யாஸ்கின்’ என்ற கதாபாத்திரம் குறுகிய காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், இரண்டாம் பாகத்தில் அந்த பாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ‘கல்கி 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்காக கமல்ஹாசன் பெறும் சம்பளம் குறித்து நடிகர் யூகி சேது ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, ‘கல்கி 2’ படத்தில் சுமார் 20 நாட்கள் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்கிறீர்கள் என்று கமல் சாரிடம் நான் கூறினேன். பின்னர் அவர் என்னை படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத்திடம் அழைத்துச் சென்றார். அப்போது தயாரிப்பாளர் கமல் சார் வெறும் 10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றார். அதனால் ஒரு நாளுக்கு இரண்டு மில்லியன் டாலர் வரை சம்பாதிக்கிறார் என்று நான் சொன்னேன்,” என யூகி சேது தெரிவித்தார்.
‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் கடந்த 2024 ஜூன் 27 அன்று வெளியானது. உலகளவில் இந்த படம் ரூ.739 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அமிதாப் பச்சனின் புதிய லுக் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோன், இரண்டாம் பாகத்தில் இடம்பெறமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கல்கி 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Did Kamal Haasan get a salary of 15 crores per day to play the villain in Kalki 2 Kamal Haasan who played the villainous villain