“திமுகதான் குதிரை பேரம் நடத்தியது!” கோடி கோடியாக பணம் கொண்டு வந்தார்கள்!ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு!
It was the DMK that engaged in horse trading They brought in crores upon crores of rupees Aathav Arjuna makes a sensational allegation
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் ‘குதிரை பேரம்’ விவகாரம் இன்று சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தமிழக வெற்றிக் கழகம் முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாறாக திமுகதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
சமீபத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்ச்சியில் அக்கட்சியின் எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அப்போது பேசிய சையத் பாரூக் பாஷா, தன்னையும் அமைச்சர் ஷாஜகானையும் அணுகிய சிலர் கோடிக்கணக்கில் பணம் வழங்கி ஆதரவு கோரியதாக தெரிவித்திருந்தார்.
“என்னையும், அமைச்சர் ஷாஜகானையும் தேடி கோடி, கோடியாக பணம் கொண்டு வந்து, ஆதரவு கொடுங்கள், கையெழுத்துப் போடுங்கள் எனக் கேட்டார்கள். நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கைக்குச் சாய்ந்தவர்கள். கடைசி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில்தான் இருப்போம் என்று கூறி அவர்களை விரட்டினோம். எங்களிடம் எந்த அமைச்சர் பதவி கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார்கள்” என அவர் தெரிவித்திருந்தார்.இந்தப் பேச்சைத் தொடர்ந்து, ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தவெக தரப்பு தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் எழுந்தபோது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுக மீது நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வெளியில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், எங்களது கூட்டணிக் கட்சியான ஐயூஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய உரையைத் திரித்து, தவெக மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கும் வகையில் ஒரு பதிவை செய்து கொண்டிருக்கிறார்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததாகவும் அவர் கூறினார்.
தவெக சார்பில் கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் எந்த எம்எல்ஏவையும் அணுகவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.
“காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் ஒத்துழைப்புடன், காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கடிதம் கிடைத்தது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் ஐயூஎம்எல் உள்ளது. மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையிலும், எங்கள் தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஐயூஎம்எல் கேரளா தலைவர்களுடன் தவெக சார்பில் பேசினோம்.
அதன்பிறகு தமிழகத்தில் உள்ள கட்சித் தலைவர்களுடனும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனும், அகில இந்திய தலைவர்களுடனும் பேசினோம். ஆனால், எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரோ அல்லது நாங்களோ தனிப்பட்ட முறையில் பேசியதில்லை” என அவர் கூறினார்.
தொடர்ந்து, குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, “மக்கள் தீர்ப்பை ஏற்று, காங்கிரஸ், ஐயூஎம்எல், விசிக, கம்யூனிஸ்ட் தோழர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவுடன் ஜனநாயக முறையில் ஆட்சி அமைத்துள்ளோம். குதிரை பேரத்தை நடத்தியது யார் என்பது தெரியும்” என்றார்.
மேலும், ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படும் சென்னை அக்கார்டு ஹோட்டல் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
“அமைச்சரின் சட்டமன்ற உரையில் கூறியது போல், அக்கார்டு ஹோட்டலில் தங்க வைத்தது யார்? அந்த இரண்டு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படும் அக்கார்டு ஹோட்டலின் உரிமையாளர் யார் என்றால், ஜெகத்ரட்சகன், திமுக எம்பி. அப்படியானால் அவர்களை அங்கு தங்க வைத்தது யார் என்பது குறித்து கூடிய விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம். திமுகதான் குதிரை பேரம் நடத்தியது” என ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.
இதனால், ஏற்கனவே தவெக மீது முன்வைக்கப்பட்டிருந்த குதிரை பேரம் குற்றச்சாட்டு தற்போது திமுகவை நோக்கி திரும்பியுள்ளது. ஒருபுறம் ஐயூஎம்எல் எம்எல்ஏ பணம் மற்றும் அமைச்சர் பதவி தொடர்பாக தங்களை அணுகியதாக கூறியிருக்கும் நிலையில், மறுபுறம் அந்த முயற்சியின் பின்னணியில் திமுக இருப்பதாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
இரு தரப்பிலும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்கார்டு ஹோட்டலில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுமா என்பதே அடுத்தகட்ட அரசியல் விவாதமாகியுள்ளது.
English Summary
It was the DMK that engaged in horse trading They brought in crores upon crores of rupees Aathav Arjuna makes a sensational allegation