தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 3 அமைச்சர்களுக்கு கல்தா.. 5 பேரின் இலாக்கா மாற்றம்? அதிகாரிகளுக்கும் செக் வைக்கிறாரா விஜய்? - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, சில முக்கிய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட இருப்பதாகவும், அமைச்சரவையில் இருந்து சிலர் நீக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல், சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றை விட முக்கியமாக, முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் இருவர் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முதல்வரை நேரடியாக சந்திப்பதில் இடையூறு ஏற்படுத்துவதாக உளவுத்துறை தரப்பில் தகவல் சென்றுள்ளதாகவும், இதுதொடர்பாகவும் முதல்வர் கவனம் செலுத்தி வருவதாகவும் கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல்வர் விஜய், தனது முதல் அமைச்சரவையை அமைத்தார். செங்கோட்டையனைத் தவிர பெரும்பாலான அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால், அவர்களின் செயல்பாடுகளை ஆரம்ப கட்டத்தில் நேரடியாக கண்காணிப்பதைவிட, உளவுத்துறை மூலம் ரகசியமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் அவர்களின் செயல்பாடுகள், துறை சார்ந்த பணிகள், அதிகாரிகளுடனான அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து உளவுத்துறைக்கு தகவல்களை திரட்ட உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கண்காணிப்பின் அடிப்படையில் ஏற்கனவே இரண்டு முக்கிய அறிக்கைகள் முதல்வர் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் 50-வது நாள் செயல்பாடுகள் குறித்த முதல் அறிக்கையும், சமீபத்தில் இரண்டாவது அறிக்கையும் முதல்வரின் பார்வைக்கு சென்றதாக கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த அறிக்கைகளில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட துறைகளில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பாடு இல்லை, துறை சார்ந்த பணிகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை, அதிகாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில், அமைச்சரவையில் இருந்து சுமார் 3 பேரை விடுவிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன.

அதேநேரத்தில், சுமார் 5 அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி அமைக்கவும், சில முக்கிய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய தமிழக அமைச்சரவையில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களுடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். தவெகவைச் சேர்ந்த 31 பேர் அமைச்சரவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனால், அமைச்சரவை மாற்றம் என்பது வெறும் இலாக்கா மாற்றத்துடன் முடிவடையாமல், புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

அமைச்சர்களின் செயல்பாடுகள் மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து செயல்படும் சில அதிகாரிகள் மீதும் முதல்வர் தரப்பு கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சில துறைகளில் செயலர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் இருந்ததாகக் கூறப்படும் சில நடைமுறைகள் மீண்டும் தலைதூக்குவதாகவும் உளவுத்துறை தரப்பில் தகவல்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சில அதிகாரிகளுக்கும் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கலாம் என கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனிடையே, தவெக தொடங்கப்பட்ட காலகட்டத்தில் விஜய்யுடன் நெருக்கமாக இருந்த சிலருக்கு அரசு மற்றும் கட்சி சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சில அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுடன், எம்எல்ஏக்கள் கூட முதல்வர் விஜய்யை நேரடியாக சந்திப்பதைத் தடுத்து வருவதாக உளவுத்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு சென்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களின் செயல்பாடுகள் குறித்து தனியாக கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகளைத் தொடர அனுமதிப்பதா அல்லது மாற்றம் செய்வதா என்பது குறித்தும் முதல்வர் தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் பரவி வரும் நிலையில், தங்களது பெயர் உளவுத்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வி சில அமைச்சர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தங்கள் மீதும் நடவடிக்கை வருமா என்ற அச்சத்தில் சில அதிகாரிகளும் இருப்பதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ள நிலையில், விரைவில் சில முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இலாக்கா மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு, சில அமைச்சர்களின் பதவி நீக்கம் மற்றும் அதிகாரிகள் மீதான நடவடிக்கை என ஒரே நேரத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A major shake up in the Tamil Nadu cabinet Three ministers to be dropped portfolios of five others to be changed Is Vijay also targeting officials


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->