'வந்தே மாதரம்' கட்டாயமா? மத்திய அரசின் சுற்றறிக்கையை தமிழ்நாடு ஏற்கக் கூடாது: முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வலியுறுத்தல்
Is Vande Mataram mandatory Tamil Nadu should not accept the Central Government circular Thirumavalavan urges Chief Minister Vijay
அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக வெளியான தகவலுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் விஜய் மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டிய நிகழ்வுகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கும் முரணானது எனக் கூறியுள்ள திருமாவளவன், இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், "வந்தே மாதரம்" பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்காது என்பதை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடல் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்பு 'வந்தே மாதரம்' பாடல் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றதாகவும், அதன் பின்னரே அரசியல் நிர்ணய சபை 'ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.
மேலும், 'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவில் இடம்பெறும் சில மத சார்ந்த குறிப்புகள் காரணமாக, சுதந்திரத்திற்கு முன்பே பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பயன்படுத்தும் சமரச நிலை உருவானதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசு, 'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்தை வழங்கும் நோக்கில் படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையும் அதற்கான ஒரு பகுதியாகவே இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை ஏற்கக் கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Is Vande Mataram mandatory Tamil Nadu should not accept the Central Government circular Thirumavalavan urges Chief Minister Vijay