தொகுதி மாறுகிறாரா வானதி சீனிவாசன்.. கோவை வடக்கு தொகுதியில் போட்டி? – வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ விளக்கம்
Is Vanathi Srinivasan changing constituency Will she contest from Coimbatore North constituency Vanathi Srinivasan MLA explanation
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் தொகுதி மாறி போட்டியிடலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் கோவை தெற்கு தொகுதியிலிருந்து கோவை வடக்கு தொகுதிக்கு மாறக்கூடும் என்ற செய்தி பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். ஆனால், அந்த வெற்றி வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த முறை பாதுகாப்பான தொகுதியை தேர்வு செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மோடி முகாம்” நிகழ்ச்சியை, பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, தையல் இயந்திரங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. ‘மோடி முகாம்’ என்ற பெயரில், தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்களின் கனவு. வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவதாக கூறப்படுவதால், இந்த தொகுதியில் தற்போது நான் அதிக கவனம் செலுத்துகிறேன் என்று சொல்வது தவறு. கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பணியாற்றி வருகிறோம். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே எங்கள் இலக்கு. இதற்காக ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள், முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இதற்கு முன்பும் கோவை வடக்கு தொகுதியில் மட்டுமல்ல, அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளோம்” என்றார்.
இதன் மூலம், தொகுதி மாற்றம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், இறுதி முடிவு கட்சி தலைமையின் கையில் இருப்பதாக வானதி சீனிவாசன் கூறியிருப்பது, பாஜக அரசியல் வியூகங்களில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Is Vanathi Srinivasan changing constituency Will she contest from Coimbatore North constituency Vanathi Srinivasan MLA explanation