பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லையைக் குறைக்கத் திட்டமா? - தமிழக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த வானதி சீனிவாசன்...! - Seithipunal
Seithipunal


சென்னையின் வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதிலும், நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதியைச் சுருக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் அரணாகத் திகழும் இந்தச் சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அதன் தாக்கப் பகுதியைக் குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறப் பகுதிகளில் தொடங்கி, பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தற்போது வெறும் 1,725 ஏக்கராகச் சுருங்கிவிட்டது.

சென்னை மாநகரின் இயற்கைப் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் இந்தச் சதுப்பு நிலம், பெருமழைக் காலங்களில் அதிகப்படியான நீரை உள்வாங்கி, அதை வெளியேற்ற உதவும் இயற்கையான வடிகால் அமைப்பாகச் செயல்படுகிறது. இதனால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.மேலும், மழைக்காலத்தில் நீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் துணைபுரிகிறது. இதன் மூலம் கோடைக்காலத்தில் சென்னை மக்களுக்குத் தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் பயனளிக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவையினங்களின் வாழிடமாகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது.இத்தகைய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அமைப்பைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதியை 316 ஏக்கராகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சதுப்பு நிலங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சதுப்பு நிலத்தின் பாதுகாப்பு எல்லையை இவ்வளவு பெரிய அளவில் குறைக்கத் திட்டமிடுவது அதிர்ச்சியளிப்பதாகும். அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்துக்குரியது.சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதியைக் குறைக்கும் நடவடிக்கை, அந்தப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிவரும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும் என்றும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே, தமிழக அரசு தனது முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை முறையாக வரையறுத்து, அதன் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.ஏற்கெனவே பெருமளவில் சுருங்கிவிட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எஞ்சியுள்ள பகுதிகளையாவது பாதுகாப்பது அவசியமாகும்.

இதைச் செய்யத் தவறினால், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பாதிக்கப்படும்.மேலும், மழைக்காலங்களில் சென்னை மாநகரம் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்திக்கும் அபாயமும் அதிகரிக்கக்கூடும். இந்த உண்மையை உணர்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதில் தமிழக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there plan reduce boundaries Pallikaranai swamp Vanathi Srinivasan who spoke out against Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->